உக்ரைனின் பாதாள வெடிபொருள் கிடங்கை அழித்த ரஷியா ராணுவம்

#Ukraine #Russia #War
Prasu
3 years ago
உக்ரைனின் பாதாள வெடிபொருள் கிடங்கை அழித்த ரஷியா ராணுவம்

ஷியா படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 3.3 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே வேறு இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்றும் கூறி உள்ளது.

ரஷியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்வதற்கான தொண்டு நிறுவனங்கள், அங்கு செல்வதற்கு போராடி வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறி உள்ளது.

தெற்கு உக்ரைனில் ராணுவ முகாம்கள் மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பல வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா, வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளில் ரஷிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர் ‘பேரழிவு தரும் பைத்தியக்காரத்தனத்தால்’ வழிநடத்தப்படுகிறது என்றும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சுவிட்சர்லாந்து விலை கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுவிட்சர்லாந்து அதிபர் இக்னேசியோ காசிஸ் கூறினார்.

போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக, 10 மனிதாபிமான வழித்தடங்களுக்கு ரஷியர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் அறிவித்தார்.

உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள சபோரிசியா நகரின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நகரத்தின்  துணை மேயர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இருந்து 22,500 பேர் இந்தியா பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது இதில் 18 பேர் பிற நாட்டுகாரர்களும் அடங்குவர் என ஐ.நா.வுக்கான உயர் தூதர்தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் இதுவரை 112 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் இவானோ-பிராங்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள ஏவுகணை மற்றும் விமான வெடிப்பொருட்களுக்கான பாதாள கிடங்கை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

துறைமுக நகரான மரியுபோல்-ஐ ரஷியா படைகள் சுற்றி வளைத்து நெருங்கியுள்ளதால் தற்காலிகமாக அசோவ் கடல் வழியை அணுக முடியவில்லை என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் ஐரோப்பா செல்லும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷியா உடனான சீனாவின் நகர்வுகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

லுகான்ஸ்க் பகுதியில் மனிதாபிமான வழி மக்கள் வெளியேறுவதற்காக இன்று திறந்து விடப்பட்டுள்ளது. மக்களை வெளியேற்றவும், உணவுப் பொருட்கள் கொண்டு வரவும் முயற்சி செய்வோம் என அந்நகர மேயர் தெரிவித்தார்.

நேற்று மட்டும் மனிதாபிமான வழியாக 9,100-க்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில இருந்து வெளியேறியுள்ளனர். இதில் 4972 பேர் மரியுபோல் நகரில் இருந்து சிக்கித் தவித்தவர்கள்

உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவில் இருந்து துருப்புக்களை மாற்ற ரஷியா முடிவு செய்துள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.

அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது, இல்லையெனில் போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷியா மீண்டு வர பல தலைமுறைகள் எடுக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

மரியுபோல் தாக்குதல் குறித்து புதினிடம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது கவலையை தெரிவித்துள்ளார். அதேவேளையில் ரஷிய அதிபர் மாளிகை உக்ரைன் மீது போர்க்குற்றம் சுமத்தியது.

மரியுபோல் தியேட்டரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்துள்ளார். உயிரிழப்பு ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் ஆர்டியோம் தட்சிஷின் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலன் இன்றி, அவர் இன்று உயிரிழந்தார்.

ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் நகரங்களில் கிடக்கும் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் முடிந்தவுடன் உக்ரைனில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளின் உதவி தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். தமது அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் அச்சம் காரணமாக மரியுபோல் நகரில் இருந்து மனிதாபிமான வழித்தடங்கள் வழியே 4,972 பேர் வெளியேறி உள்ளனர். இதில் 1,124 பேர் குழந்தைகள் என்று உக்ரைன் அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷிய படைகளுக்கும், உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. மரியுபோல் நகரில் பொதுமக்கள் அஞ்சம் அடைந்துள்ள தியேட்டர் மீது ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தார், ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஏற்கனவே 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வுக்கான புலம் பெயர்ந்தோர் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷிய அதிபரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்  மேக்ரான் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மரியுபோல் நகரின் நிலைமை கவலை அளிப்பதாக கூறிய மேக்ரான், அங்கு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உக்ரைனில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

உக்ரைன் மீதான தனது படையெடுப்பு பற்றிய தவறான தகவல்களையும் பிரச்சாரத்தையும் பரப்புவதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ரஷியா பயன்படுத்துவதாக 6 மேற்கத்திய உறுப்பு நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தன. ரஷியா தனது தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டின. 

உக்ரைன் நிலவரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷிய பிரதிநிதி பேசினார். அப்போது, உக்ரைனில்  உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், பென்டகனால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்கள், ரஷிய பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார். ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க  பிரதிநிதி மறுத்தார். இந்த குற்றச்சாட்டுகள் வினோதமான கட்டுக்கதைகள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
அமைதிக்கான சர்வதேசப் பொறுப்புகளை சீனாவும், அமெரிக்காவும் தோளில் சுமக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டான்பாஸ் பிராந்தியத்தை இனப்படுகொலையில் இருந்து விடுவிப்பதே உக்ரைன் மீது மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார். 

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பில் 816 பேர் கொல்லப்பட்டதாகவும், 1333 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது

உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போரை நிறுத்தும்படி ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சீன அதிபரிடம் பைடன் வலியுறுத்த உள்ளார்.

உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், போலந்துக்கு மாற்றப்பட்ட பிறகும் உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்காகவும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!