பிரித்தானியா வருபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

பிரித்தானியா வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக, 2020 முதல் சர்வதேச விமான பயண சேவையை இரத்து செய்த பிரித்தானியா பின்னர் குறிப்பிட்ட நாடுகள் இடையே சேவையை ஆரம்பித்தது.
இதன்போது தமது நாட்டிற்கு வரும் பயணிகள் கட்டாய தடுப்பூசி, புறப்படுவதற்கு முன்னர் கோவிட் பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை பிரித்தானியா முழுமையாக தளர்த்தியுள்ளது.
இதன்படி, தடுப்பூசி செலுத்தாத பயணிகள் புறப்படும் முன் கட்டாய பரிசோதனை, எங்கு தங்க உள்ளோம் என்பதை தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய விமான போக்குவரத்து அமைச்சர் ரொபர்ட் கோர்ட்ஸ் கருத்து வெளியிடுகையில்,
இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு பரிசோதனை மற்றும் தடுப்பூசியிலும் தீவிர கவனம் செலுத்தினோம். இதனால் தற்போது எவ்வித கட்டுப்பாடும் இன்றி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
இதனிடையே, எதிர்காலத்தில், கொரோனா உருமாற்றம் ஏதும் இருந்தால், அதற்கேற்ப கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



