மாணவர்கள் இல்லாமல் செயல்படும் 276 பள்ளிக்கூடங்கள் - எங்கு தெரியுமா? - ஆய்வில் அதிர்ச்சி!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் செயல்பட்டு வரும் 276 பள்ளிக்கூடங்களில் 317 ஆசியர்கள் பணியாற்றுகின்றனர்.ஆனால் ஒரு மாணவன் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வெளியான ஒரு ஆய்வறிக்கையில், கராச்சியில் மொத்தமுள்ள 2,844 பள்ளிகளில் 276 பள்ளிகளில் ஒரு மாணவன் கூட இல்லை. ஆனால் 317 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து அதிகாரிகள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
சிந்து மாகாண பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் ‘சீர்திருத்த ஆதரவு அலகு என்றழைக்கப்படும் (ஆர் எஸ் யு)’, 2019ம் ஆண்டு எடுத்த சென்சஸ் கணக்கின்படி இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கராச்சியில் உள்ள 276 பள்ளிகளில் (அதாவது மொத்த பள்ளிகளில் 9.7 சதவீதம் பள்ளிகளில்) ஒரு மாணவன் கூட பயிலவில்லை. அவற்றுள் 119 பள்ளிகள் ஆண்கள் பயிலும் பள்ளிகள் ஆகும். 38 பள்ளிகள் பெண்கள் பயிலும் பள்ளிகள் ஆகும்.
இந்த விவகாரம் குறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கல்வி இயக்குனர் சாஹித் சமான் மற்றும் தொடக்கப் பள்ளிக்கல்வி இயக்குனர் அபிதா லோதி ஆகியோர் இந்த விஷயம் குறித்து பேச மறுத்துவிட்டனர்.
2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், பள்ளிகளில் இருந்து விலகி சென்ற மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியளித்துள்ளது.
கராச்சி மாகாணத்தில், கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கல்வித்துறையால், முறையான வசதிகள் இல்லாத 4901 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மூடப்பட்ட பள்ளிகளில் முறையான கட்டிடங்கள் இல்லை, மாணவர் சேர்க்கை இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
114 பள்ளிகள் கராச்சியில் மூடப்பட்டுள்ளன, அவற்றுள் 53 பள்ளிகள் மாலிர் மாவட்டத்திலும், 15 பள்ளிகள் மத்திய கராச்சி மாவட்டத்திலும், 14 பள்ளிகள் மேற்கு கராச்சி மாவட்டத்திலும், 12 பள்ளிகள் தெற்கு கராச்சி மாவட்டத்திலும், 9 பள்ளிகள் கேமாரி மாவட்டத்திலும், 7 பள்ளிகள் கோரங்கி மாவட்டத்திலும், 4 பள்ளிகள் கிழக்கு கராச்சி மாவட்டத்திலும் மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, கராச்சியில் 100 பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அவற்றுள் 10 பள்ளிகளில் ஒரு மாணவன் கூட கல்வி பயில இல்லாத நிலை உள்ளது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.



