பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ரஷியாவுக்கு சீனா உதவினால் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்:அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் மீதான தனது ஆக்கிரமிப்பில் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க ரஷியாவிற்கு உதவினால் சீனா அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
US says China faces consequences if it helps Russia https://t.co/aIKzE7eIKe
— BBC News (World) (@BBCWorld) March 14, 2022
சமீபத்திய நாட்களில் ரஷியா சீனாவிடம் குறிப்பாக ஆளில்லா விமானங்கள் உட்பட இராணுவ உபகரணங்களை கேட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், "சீனா நேரடியாகவோ அல்லது தனிப்பட்ட முறையில், பெரிய அளவிலான பொருளாதாரத் தடை ஏய்ப்பு முயற்சிகளுக்கு ரஷியாவிற்கு ஆதரவளித்தால் அது கடுமையான விளைவுகள் ஏற்படும்.மேலும் நாங்கள் ரஷியா முன்னோக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டோம், உலகில் எந்த நாட்டிலிருந்தும் இந்த பொருளாதாரத் தடைகளிலிருந்து ரஷியாவிற்கு உதவ அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.



