கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 38 வழக்குகள் வாபஸ்!

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, நீதிவான் நீதிமன்றங்களிலும் மேல் நீதிமன்றங்கலிலும் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளில் 38 வழக்குகளை மீளப் பெற்றுக்கொண்டுள்ளது.
அதில் பெருமளவான வழக்குகள் கடந்த 2021 ஆம் ஆண்டே வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அவ்வாண்டு மட்டும் வாபஸ் பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 36 என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தெரிவிக்கிறது.
அவ்வாண்டில் நீதிவான் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்த 14 வழக்குகளும் மேல் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டிருந்த 22 வழக்குகளும் இவ்வாறு வாபஸ் பெறப்பட்டதாக, தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி கோரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து குறித்த ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, வழக்கொன்றினை தாக்கல் செய்ய அவ்வாணைக் குழுவின் 3 ஆணையாளர்களினதும் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த வழக்குத் தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படியே, 3 ஆணையாளர்களினதும் அனுமதியின்றி தொடுக்கப்பட்ட வழக்குகள், மீள வழக்குத் தொடுக்கப்படும் என்ற நிபந்தனையியுடன் இவ்வாறு வாபஸ் பெறப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மீளப் பெற்ற வழக்குகளில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவ்வாணைக் குழு, 3 ஆணையாளர்களினதும் அனுமதி பெறப்பட்ட பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



