இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட வெளிநாட்டுப் பிக்கு: கைகளையும் முகத்தையும் கட்டி வீதியில் விட்டுச் சென்ற அவலம்

பிலியந்தலை மடபாத பிரதேசத்தில் சிலரால் கடத்தப்பட்ட வெளிநாட்டு பிக்கு ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று (12) மாலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
மடபாதா விளம்பர பலகைக்கு அருகில் 26 வயதான வங்கதேச துறவி ஒருவர் கடத்தப்பட்டு, கை, முகத்தை கட்டி வேனில் ஏற்றிச் சென்ற இனந்தெரியாத நபர்கள், ஹாலிஎல கெடவல பிரதான வீதியில் போட்டுச் சென்றுள்ளனர்.
அவ்வீதியால் பயணித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மஹரகம காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனது விகாரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பிலியந்தலை மடபாத பிரதேசத்தில் கும்பல் தன்னை வேனில் ஏற்றி, கைகளையும் முகத்தையும் கட்டி, மணிக்கணக்கில் அழைத்துச் சென்று ஹாலிஎல பகுதியில் விட்டுச் சென்றதாக ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிக்கு கடத்தப்பட்டமை குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக இந்த விடயம் சிஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்என பொலிஸார் தெரிவித்தனர்.
தாம் கடத்தப்பட்டு வீதியில் விட்டுச் சென்றதாக முறைப்பாடு செய்த பங்களாதேஷ் பிக்கு பதுளை பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



