உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் - ஐ.நா கண்டனம்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இதில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டு உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்தன.
இந்த தாக்குதலுக்கு ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையின் இடிபாடுகளுக்குள் மக்கள், குழந்தைகள் உள்ளனர். இது மிகவும் மோசமான செயல் என்று கூறினார்.
இந்த நிலையில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என்று ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
'உக்ரைனின் மரியுபோலில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுகள் அமைந்துள்ள மருத்துவமனை மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது.
தமக்கு தொடர்பில்லாத போருக்கு பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வருகின்றனர். இந்த அர்த்தமற்ற வன்முறை நிறுத்தப்பட வேண்டும். இரத்தம் சிந்தப்படுவதை உடனே முடித்து வையுங்கள்' என்று கூறியுள்ளார்.



