உலக நாடுகளை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா!!
உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வைரஸ்களைவிட அபாயகரமானவை என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் .
புதுவகை வைரஸில் ஸ்பைக் புரதம் இடம்பெற்றிருக்கும் என்றும் இது , ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை செயலிழக்கச் செய்யும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர் . முதலில் தென் ஆப்பிரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் , போட்ஸ்வானா உள்ளிட்ட பக்கத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது .
இதே வகை வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் ஹாங்காங்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் . அவர்களிடமிருந்து வைரஸ் மாதிரிகளை பெற்றுக் கொண்ட விஞ்ஞானிகள் அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் .
பி .1.1.529 என்ற புதிய வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள் . இஸ்ரேல் நாட்டிலும் புதிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது . இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது . இந்த பிரசனையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள மத்திய அரசு தென்னாப்பிரிக்கா , போட்ஸ்வானா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளது .
சில உலக நாடுகள் புதிய வைரஸ் பாதிப்பை மிகவும் ஆபத்தானது என்று எடுத்துக் கொண்டு பிரிட்டன் சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் , தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன . பி .1.1.529 வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள நிலையில் , இந்தியாவில் இதுவரை புதுவகை கொரோனா தொற்று பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது .