ஐயப்ப பக்தர்கள் தெரிந்திருக்க வேண்டியவை....
 
                சபரிமலையில் எழுந்தருளியிருக்கும் ஐயப்பனுக்கு என்று பல சிறப்புகள் உண்டு. தண்டகாரண்ய மகரிஷியின் ஆணவத்தை குறைப்பதற்காக, நாராயணர், ஜெகன் மோகினியாகவும், சிவபெருமான், பிட்சாடனாராகவும், அவதாரம் எடுத்தனர். இவர்கள் இருவரின் ஜோதி பிழம்பிலிருந்து பிறந்தவர்தான் ஐயப்பன். ஹரிக்கும், ஹரனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஆனந்தமயமான ஐயப்பன்.
தன்னலமற்ற குணத்தை கொண்டவர் ஐயப்பன். தன்னிடம் வந்து மனதார வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டிய வரத்தை அளிப்பவர் சபரிமலை நாதன். ஐயப்ப வழிபாடு என்பது பல வருடங்களுக்கு முன்பு கேரளாவில் மட்டும் தான் இருந்து வந்தது. இந்த சபரிமலை ஐயப்பனின் பெருமையை தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு ‘ஸ்ரீ ஐயப்பன்’ என்ற நாடகத்தின் மூலம் உணர்த்தியவர் நவாப் ராஜ மாணிக்கம் அவர்கள். இந்த நாடகக் குழுவில் நம்பியார் அவர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எதற்காக சபரி மலைக்கு செல்வதற்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கின்றது என்று எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி இருக்கத்தான் செய்கிறது. சபரிமலை ஐயப்பன் சன்னிதானமானது மலையின் மேல் இருப்பதால், பல கஷ்டங்களை தாண்டி தான் அந்த இறைவனை தரிசனம் செய்ய வேண்டியிருக்கிறது. தரிசனத்திற்காக செல்லும் வழியில் ஏற்படும் இடர்பாடுகளை நாம் தாங்கிக் கொள்வதற்காக எடுக்கப்படும் பயிற்சிகள் தான் இந்த கடுமையான விரதம்.ஒரு மனிதன் தன்னைத்தானே பக்குவப்படுத்திக் கொண்டு ஒழுக்கமாக வாழ்வதற்கு பயிற்சி எடுத்துக் கொள்ளும் காலம் என்பதையும் இது குறிக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்து கொண்ட பக்தர்கள் எப்படி விரதம் இருப்பது, எதை செய்வது, எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவு சற்று விரிவாக காண்போமா.
சபரிமலைக்கு மாலை அணிந்து கொள்பவர்கள் பல வருடங்களுக்கு முன்பு, 60 நாட்கள் விரதத்தை கடைப்பிடித்து வந்தனர். 60 நாட்கள் விரதம் இருப்பது மிகவும் கடினமாக இருந்ததால் அதனை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களாக குறைத்துக் கொண்டனர். ஆனால் தற்சமயம் விரதம் இருக்கும் நாட்களை அவரவர் சௌகரியத்துக்கு ஏற்றவாறு, அவரவர்களே தீர்மானம் செய்து கொள்கிறார்கள். ஆனால் சபரிமலை ஐயப்பனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து செல்வது தான் சரியான முறை.
மாலை அணிந்து கொண்டிருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து பச்சைத் தண்ணீரில்தான் குளிக்க வேண்டும். பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும்போது பம்பையில் நீராடி விட்டுத்தான், தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பம்பையில் தண்ணீர் மிகவும் குளிர்ந்த தன்மை உடையதால் அதனை நம் உடம்பானது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் நம் முன்னோர்கள் இந்த பழக்கத்தை கடைபிடித்து வந்தனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் வெதுவெதுப்பான நீரினில் குளிப்பதில் எந்த தவறும் இல்லை.
அடுத்ததாக நெற்றியில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்வது கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டும். வீட்டிலுள்ள ஐயப்பனின் திருவுருவப் படத்திற்கு தினமும் பூக்கள் மாற்றப்பட வேண்டும். ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்தது. தினம் தோறும் பூஜை செய்யும்போது ஐயப்பனுக்கு கண்டிப்பாக நெய்வேத்யம் படைக்க வேண்டும். சமைத்து தான் நெய்வேத்யம் படைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பழ வகைகளோ அல்லது ஒரு டம்ளர் பால் வைத்துக்கூட பூஜை செய்யலாம்.
காலை வேளையிலும் மாலை வேளையிலும் ஐயப்பனை 108 சரணம் சொல்லித்தான் பூஜை செய்ய வேண்டும். ஐயப்பன் விரதத்தை சாப்பிடாமல் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் எந்த கட்டாயமும் இல்லை. காலையில் பூஜையை முடித்துவிட்டு உணவு அருந்தலாம். இதேபோன்று மாலை பூஜையை முடித்துவிட்டு இரவு உணவு அருந்தலாம்.ஐயப்ப பக்தர்கள் காவி உடையை அணிவது தான் சிறந்தது. வேலைக்கு செல்பவர்களுக்கு காவி உடை அணிய முடியாத சூழ்நிலையில் இதை மாற்றிக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. கன்னிச்சாமியாக இருந்தால் கருப்பு உடை அணிவது சிறப்பான ஒன்று.
காலணி அணியக்கூடாது என்பதுதான் சரியான முறை. சிலருக்கு அலுவலகங்களில் ஷூ அணியாமல் செல்ல கூடாது என்ற கட்டாயம் இருந்தால் அதை அணிந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அந்த காலகட்டத்தில் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் பெருவழியில் செல்வதற்காக நம் பாதங்களை தயார் படுத்திக் கொள்ளவே காலணிகளை அணியாமல் 48 நாட்கள் பயிற்சி எடுத்து வந்தார்கள்.
இரவில் தூங்கும் பொழுது புதியதாக வாங்கிய பாயின் மீதுதான் ஐயப்ப பக்தர்கள் படுத்துக்கொள்ள வேண்டும்.மாலை அணிந்து இருப்பவரின் வீட்டிலிருக்கும் பெண்கள், பூஜை அறைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டால், அவர்களின் முகத்தினை நேருக்கு நேராக, சபரிமலைக்கு மாலை அணிந்து இருப்பவர்கள் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த சமயத்தில் அவர்கள் சமைத்த உணவை சாப்பிடக்கூடாது. முடிந்த வரை வெளியில் சென்று தங்கிக் கொள்வது மிகவும் நல்லது.
மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்களும் மாலை அணிந்தபின் இவைகளைத் தவிர்த்துவிட வேண்டும். எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் அதனை ஒரு மண்டலம் கஷ்டப்பட்டு கடைப்பிடித்து விட்டோமேயானால் அது நமக்கு பழகிவிடும். தீய பழக்கத்தில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவே இந்த விரத முறைகள் கடைபிடிக்கப்படுகிறது.
யோக பட்டை அணிந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கும் அந்த ஐயப்பனை வழிபடச் செல்வதற்கு முன்பு சில கடுமையான விரதங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மலைக்குச் செல்வதற்கு முன்பு, உங்களால் முடிந்தவரை, வீட்டில் ஒரு ஐயப்ப பூஜை செய்து, பத்து ஐயப்ப சுவாமிகளுக்காவது அன்னதானம் அளிப்பது என்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால் அன்னதானப்பிரபு என்று அழைக்கப்படுபவர் ஐயப்பன்.
குழந்தை இல்லாதவர்கள் தென்னங்கன்று அல்லது மணி இவைகளை செலுத்துவதாக பிரார்த்தனை செய்துகொள்ளலாம். குழந்தை பிறந்த பிறகு இந்த பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும். 48 நாட்கள் கடுமையாக விரதமிருந்து சபரிமலைக்கு சென்றுவிட்டு வந்த பிறகு பிறந்த, நிறைய குழந்தைகளுக்கு அந்த ஐயப்பனின் நாமத்தையே பெயராக சூட்டுவார்கள். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மனதார அந்த ஐயப்பனை நினைத்து விரதமிருந்து வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் இன்றளவும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது என்பதை, நீங்கள் சபரிமலைக்கு சென்று வந்த பிறகு உணர்வீர்கள்.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            