அண்ணல் அம்பேத்கர்

Keerthi
2 years ago
அண்ணல் அம்பேத்கர்

அறிமுகம்
அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவர். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிள்ளைகளை பள்ளியில் மிகவும் மோசமாக நடத்தினார்கள். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பிள்ளைகள் வகுப்பறையின் ஒரு மூலையில்தான் ஒடுங்கி அமரவேண்டும். அதுவும் அவர்கள் தரையில் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால் "தீட்டு' ஒட்டிக்கொள்ளுமாம். என்ன மடமை! அதனால் தரையில் ஒரு கோணியை விரித்து அதன்மேல்தான் உட்கார வேண்டும். வீட்டுக்குச் செல்லும்போது கோணியை எடுத்துச் சென்றுவிட வேண்டும். ஆசிரியர்கள் தவறிப்போய்க் கூட அந்த தாழ்த்தப்பட்ட சாதிப்   பிள்ளைகளைத் தொடமாட்டார்கள். அவ்வளவு ஏன்? அந்தப் பிள்ளைகள் வைத்திருக்கும் புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றைக்  கூடத் தொடமாட்டார்கள்.

தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகள் ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இருந்தால் மட்டும் போதும். அவர்கள் பாடங்கள் படிக்க வேண்டியதில்லை. பாடல்கள் பாடவேண்டாம். ஆசிரியர்கள் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படமாட்டார்கள். அந்தப் பிள்ளைகளின் நலத்தில் அவர்களுக்குக் கொஞ்சமும் அக்கறை கிடையாது.

தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளுக்கு, பள்ளிக்கு வந்து செல்வதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. வகுப்பில் இருக்கும்போது தாகம் எடுத்தால் அந்தக் குழந்தைகள் தாங்களாகத் தண்ணீர் எடுத்துக் குடிக்கக்கூடாது. என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தாகம் உள்ள குழந்தைகள் மேலே அண்ணாந்துகொண்டு "ஆ' என்று வாயைத் திறந்துகொள்ள வேண்டும். இரக்கம் கொண்ட உயர்சாதிப் பிள்ளைகள் குடி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளின் வாயில் ஊற்றுவார்கள். அதைத்தான் அவர்கள் குடிக்க வேண்டும். இதுதான் அந்த நாளில் இருந்த நிலை.

அம்பேத்கர் பள்ளிப்பருவம்
அம்பேத்கர் கல்வி கற்றுவந்த பள்ளியிலும் இதே நிலைதான். கள்ளமற்ற பிள்ளைகளின் உள்ளத்திலும் தீண்டாமை எனும் நச்சு விதை விதைக்கப்பட்டிருந்தது. என்ன கொடுமை! இந்தச் சூழ்நிலையில் எந்தக் குழந்தைக்குத்தான் படிப்பில் விருப்பம் ஏற்படும்?

அம்பேத்கரின் நிலையும் அப்படித்தான் இருந்தது. அதைப்போல, சாதி வெறியர்களுக்கு நடுவில் சில சமத்துவவாதிகளும், நல்லவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? அம்பேத்கர் படித்து வந்த பள்ளியில் ஓர் அந்தண ஆசிரியர் இருந்தார். அவர் பெயர் அம்பேத்கர். அவர் நம் அம்பேத்கரிடம் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர்; சாதி பேதங்களை அறவே வெறுப்பவர்; நல்ல மனம் படைத்தவர். அந்த ஆசிரியருக்கு அம்பேத்கரிடத்தில் ஒரு தனிப் பற்றும் அக்கறையும் இருந்தன.

பள்ளி இடைவேளைகளில் அந்த ஆசிரியர் நம் அம்பேத்கரை அன்புடன் அழைத்துச் செல்வார். சோறு, ரொட்டி, சமைத்த காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுத்து உண்ணச் செய்வார். அத்துடன் அறிவுரையும் கூறுவார். அந்த ஆசிரியரின் அன்பும் கனிவும், மாணவரான அம்பேத்கரை மிகவும் கவர்ந்தன. அந்த ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் பின்னாளில் தன் பெயரை அம்பேத்கர் என்று வைத்துக்கொண்டார். அம்பேத்கரின் இயற்பெயர் "பீமாராவ் ராம்ஜி' என்பது.

வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்
ஒரு முறை அம்பேத்கரின் தந்தை ராம்ஜி, கோரிகோன் என்னும் இடத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். அந்த ஊருக்குச் சென்று தங்கள் தந்தையைப் பார்த்து வரவேண்டிய அவசியம் அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் ஏற்பட்டது. அதனால் அவர்கள் தங்கள் வருகையைக் குறித்து தங்கள் தந்தைக்கு எழுதினார்கள். ரயில் நிலையத்திற்கு வந்து தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். பிறகு, தங்கள் திட்டப்படி ரயில் வண்டியில் ஏறிச் சென்று தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருந்த நிலையத்தில் இறங்கினார்கள். தங்கள் தந்தை வருவார் என்று வெகு நேரம் காத்திருந்தார்கள். குறித்த நேரத்தில் கடிதம் கிடைக்காததால் ராம்ஜி, தன் மகன்களை அழைக்க ரயில் நிலையத்திற்கு வரவில்லை.

நெடுநேரம் காத்திருந்தும் தந்தை வராததால் அம்பேத்கரும், அவருடைய அண்ணனும்  மனம் சோர்ந்தனர். அந்த ரயில் நிலையத்தில் இருந்த அதிகாரி நல்ல மனிதர்.. நீண்ட நேரமாக நிலையத்தில் காத்திருக்கும் அம்பேத்கரையும், அவர் அண்ணனையும் நெருங்கி விசாரித்தார். விஷயம் அறிந்து வருத்தப்பட்டார். தாம் உதவி செய்வதாகக் கூறினார். நிலையத்தின் அருகில் இருந்த ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்து கோரிகோனுக்குச் செல்லும்படிக் கூறினார்.

அண்ணனும் தம்பியும் அதிகாரிக்கு நன்றி கூறினார்கள். வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். வண்டிக்காரன் வண்டியை ஓட்டிச் சென்றான். வண்டி சென்றுகொண்டிருக்கும்போதே, வண்டிக்காரன் மெல்லப் பேச்சைத் தொடங்கினான். அம்பேத்கரையும், அவரது அண்ணனையும் பற்றி விசாரித்தான். களங்கம் இல்லாத சிறுவர்கள் இருவரும் தாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைக்காமல் கூறிவிட்டனர்.

அவ்வளவுதான் வண்டிக்காரனுக்குக் கடும் கோபம் வந்தது. தாழ்த்தப்பட்டவர்களைத் தன் வண்டியில் ஏற்றியதால் தன் வண்டி தீட்டுப்பட்டுவிட்டதாக எண்ணினான். வண்டியைவிட்டுக் குதித்தான்.மாட்டை அவிழ்த்துத் தூர நிறுத்தினான். குப்பைக் கூடையைக் கவிழ்ப்பதுபோல வண்டியைத் தலைகீழாகக் கவிழ்த்தான். பாவம்! அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் சாலை ஓரத்தில் சென்று விழுந்தார்கள். அவர்களுடைய ஆடைகள் அழுக்காயின. வாய், கண், காது, மூக்கு, உடல் முழுவதும் மண்ணாயின. அவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர்.

வண்டிக்காரனோ வாயில் வந்தபடி ஏசிக்கொண்டிருந்தான். அம்பேத்கரின் அண்ணன் சிறிது நேரம் யோசித்தார். வண்டிக்காரனோடு தகராறு செய்வதில் பயன் இல்லை என்று உணர்ந்தார். வண்டிக்காரனை மெல்ல நயந்து காரியம் சாதிக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவர் வண்டிக்காரனைப் பார்த்து, "வண்டிக்காரரே, கோபப்படாதீர்கள். வண்டியில் ஏறக்கூடாது என்பது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் ஏறிவிட்டோம். மன்னித்துக்கொள்ளுங்கள். உங்கள் வண்டியும் தீட்டுப்பட்டுவிட்டது. நாங்களும் ஊருக்குச் சென்றாக வேண்டும். ஊரோ புதிது. அதனால் நீங்கள்தான் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். வேறு வழியில்லை. பேசிய கூலியைவிட இரண்டு மடங்கு அதிகம் தருகிறோம். தயவு செய்து வண்டியில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று பணிவோடு கேட்டுக்கொண்டார்.

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் அல்லவா? இரண்டு மடங்கு அதிகப் பணம் என்றதும் வண்டிக்காரனின் கோபம் போன இடம் தெரியவில்லை. ஆயினும், தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுவர்களுக்கு வண்டி ஓட்டத் தயாராக இல்லை. வண்டியை அம்பேத்கரின் அண்ணனே ஓட்ட வேண்டும் என்று முடிவானது. அம்பேத்கர் வண்டியில் அமர்ந்துகொண்டார். அண்ணன் வண்டியை ஒட்டினார். வண்டிக்காரனோ, வண்டியைத் தொடர்ந்து சென்றான்.

செல்லும் வழியில் அம்பேத்கருக்கும் அவரது அண்ணனுக்கும் தண்ணீர்த் தாகம் எடுத்தது. பாதையில் இருந்த வீடுகளை அணுகித் தண்ணீர் கேட்டார்கள். ஒருவரும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. குட்டையில் கிடக்கும் நீரையும், குழம்பிய சேற்று நீரையுமே குடிக்கச் சொன்னார்கள். தண்ணீர் கேட்கச் சென்றவர்களை வெறுப்போடு நோக்கி "விலகிப் போங்கள்'' என்று கூறினார்கள். யாருடைய நெஞ்சிலும் அன்பு பிறக்கவில்லை. சிறுவர்கள் தாகத்தால் வெயிலில் பறித்துப்போடப்பட்ட கீரைகள் போலத் துவண்டார்கள். மாலை முதல் இரவு வரை அந்த நிலை நீடித்தது. தந்தையைக் கண்ட பிறகே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்தது. உயர்சாதிக்காரர்கள் என்போர் இழைத்த கொடுமைகளை எண்ணி அந்த இளம் உள்ளங்கள் நொந்தன. சிறுவரான அம்பேத்கரின் மனமோ மிகவும் புண்பட்டது.

இதைப்போல அம்பேத்கருக்கு மற்றொரு முறையும் ஓர் அனுபவம் ஏற்பட்டது. அப்போதும் அவருக்குத் தண்ணீர் தாகம். எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோரையும் கேட்டுப் பார்த்தார். யாரும் தண்ணீர் தருவதற்கு முன்வரவில்லை. நாக்கு வறண்டது. அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அருகில் இருந்த பொதுத் தண்ணீர் துறையில் இறங்கித் தண்ணீர் குடித்துவிட்டார். அதை ஒரு உயர்சாதிக்காரர் பார்த்துவிட்டார். பிறகு கேட்கவேண்டுமா? பிடித்து வரப்பட்ட அம்பேத்கர் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கப்பட்டார்.

தீண்டாமை ஒழிப்பு
இந்த நிகழ்ச்சிகள் இளம் அம்பேத்கரின் மனதில் ஆழப் பதிந்தன. தீண்டாமையை ஒழிப்பதற்குப் பாடுபடவேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்.

அண்ணல் அம்பேத்கர் 1891 - ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 - ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையின் பெயர் ராம்ஜி. அம்மாவின் பெயர் பீமாபாய். அம்பேத்கர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பேராசிரியர், சட்ட மேதை, இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தளித்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுதும் அயராது உழைத்தார். 1956 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!