துபாயில் 6 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி

Keerthi
4 years ago
துபாயில் 6 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி

துபாயில், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்குகிறது. அடுத்த 6 மாதங்கள் தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. அமீரகம், இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கிறது.

பிரத்தியேக அரங்கங்கள், பல்வேறு தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த மாபெரும் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறுகிறது.

இதற்காக இம்மாதம் முழுவதும் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடந்து வந்தது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் மொத்தம் 1,000 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.

மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் இந்தியாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்க பாடகி மரியா கரே, அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லையோனல் மெஸ்சி, மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான அமீரக இசைக்கலைஞர் ஹுசைன் அல் ஜாஸ்மி, இந்தி நடிகை சோனம் கபூர், இயக்குனர் சேகர் கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

ஏ.ஆர் ரஹ்மான் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு அரபு நாடுகளை சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் ‘பிர்தோஸ் ஆர்கெஸ்ட்ரா’ இசைக்குழுவினரின் புதுமையான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரமாண்டமான மேடையில் வண்ணமயமான விளக்கொளியில் நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர உள்ளது.

ஒளி, ஒலி காட்சி அமைப்புகளுடன் பிரமாண்ட மேடை இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் திரையின் பின்புலத்தில் வியப்பூட்டும் வகையில் காட்சியமைப்புகள் ஒளி வெள்ளத்தில் மக்களை பரவசப்படுத்த உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தின் ‘அல் வாசல் பிளாசா’ என்ற முகப்பு பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த அல் வாசல் பிளாசாவில் உள்ள கோள வடிவ கோபுரத்தில் 390 டிகிரி கோணத்தில் ஒளிரும் திரை அமைப்பு உள்ளது. எக்ஸ்போ 2020 கண்காட்சியின் தொடக்க விழா அமீரகம் முழுவதும் உள்ள 430 பகுதிகளில் பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் virtualexpo.world என்ற இணையதளம் மற்றும் எக்ஸ்போ தொலைக்காட்சியிலும் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணி முதல் நேரடி காட்சிகள் ஒளிபரப்பாகும். அதேபோல் நாளையும் பல்வேறு பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அரங்கிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரங்கில் இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் பங்கேற்க உள்ளது.

மொத்தம் இந்தியாவின் 9 மத்திய மந்திரிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த மாபெரும் நிகழ்வை நேரடியாகவும், இணையதளம் மற்றும் தொலைக்காட்சியில் கண்டுகளிக்க உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!