பாராளுமன்றத்தை மூடிவிட்டு இரவோடிரவாக இரகசிய ஒப்பந்தங்கள்! - ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

"மதுபானசாலைகளைத் திறந்து பாராளுமன்றத்தை மூடிவிட்டு இரவோடிரவாக இரகசிய ஒப்பந்தங்களை அரச தரப்பினர் கைச்சாத்திடுகின்றனர்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"கடந்த வருடத்திலும் இவ்வருடத்தில் இன்று வரையுமாக நாம் 25 பாராளுமன்ற நாட்களை இழந்து விட்டோம். நாட்டில் மதுபானசாலைகளைத் திறக்கிறார்கள். பாராளுமன்றத்தை மூடுகின்றார்கள். இவ்வாறு மூடிவிட்டு இரவோடிரவாக இரகசிய ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுகின்றனர்.
இந்த இரகசிய ஒப்பந்தங்கள் தொடர்பான உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதற்காகவே பாராளுமன்றத்தை மூடுகின்றனர்.
அமெரிக்காவுக்கு இரகசிய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட கெரவலப்பிட்டிய மின்நிலைய ஒப்பந்தம் தொடர்பில் நாம் பேச வேண்டும். ஆனால், நான்கு நாள் அமர்வில் இரு நாட்கள் பாராளுமன்றம் மூடப்படுகின்றது. அவ்வாறானால் நாம் எப்படி உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்துவது?
வெளிநாடுகளில் சூம் தொழில்நுட்பம் மூலம் பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படுகின்றன. அதேபோன்று இங்கும் செய்ய முடியும். பாராளுமன்றத்தை மூடுவது பெரும் அநீதி. எனவே, இது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாராளுமன்றம் மூடப்படுவதற்கு நாம் எமது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்" - என்றார்.



