மாற்றுத் திறனாளிகளுக்கான கேந்திர நிலையம் திறப்பு

வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறளாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் வெகுசன ஊடக அமைச்சரின் தலைமையில், நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
மாற்றுத் திறளாளிகள் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகளால் இக்கேந்திர நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இக்கேந்திர நிலையத்தினை உருவாக்குவதற்கான அடிப்படை காரணமாக அமைந்தது, இலங்கையில் மாற்றுத் திறளாளிகளின் விசேட தேவைகளை துரிதமாக, எவ்வித தடையுமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கிலேயாகும்.
அதற்கு நிகராக மாற்றுத்திறனுடைய பிரஜைகளின் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட விசேட அப்லிகேஷன் (APP) ஒன்றும் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் உரை நிகழ்த்திய வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இன்றைய தினத்திற்கு இலங்கை வரலாற்றில் புதியதொரு அர்த்தம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச சைகைகள் மொழி தினமான இன்று (செப்டெம்பர் 23) இலங்கையில் அங்கவீனமடைந்துள்ள சகோதர பிரஜைகளுக்காக இதுவரை கிடைக்காத உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் செயன்முறையில் ஓர் திருப்புமுனையாக இதனை குறிப்பிட முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.



