சொத்தைக் கைப்பற்ற மனைவியைக் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன்

சொத்தை பெறும் முயற்சியில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை படுக்கையில் வைத்து கொலை செய்த தொழிலதிபரை பொரலஸ்கமுவ காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பாதி எரிந்த தலையணை மற்றும் பெட் சீட்டையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இவ்வாறு பலியானவர் பொரலஸ்கமுவ எகொடவத்தையில் வசிப்பவர் கலனி யசிந்தா மாபலகம (45) என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிட் -19 தொற்று காரணமாக குறித்த பெண் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், கணவர் செப்டம்பர் 15ம் திகதி இரவு 10 மணியளவில் மனைவியின் சகோதரருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது மனைவி தூக்கத்தில் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
சகோதரர் வந்த பிறகுஇ பெண்ணின் உடல் கொழும்பு தெற்கு போதனா (களுபோவில) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பெண் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்து, பிசிஆர் சோதனை நடத்தியதில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டதை மேலும் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் சகோதரர், கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்து உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது கணவர் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதாகவும் தொடர்ந்து கழுத்தில் கீறப்பட்ட காயத்தை சட்டை கொலரால் மறைக்க முயன்றதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மூக்கு மற்றும் வாயை இறுக்கமாக மூடி மூச்சுத்திணறல் காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நீண்ட விசாரணையில் இறப்பு பற்றிய அனைத்து விவரங்களும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் தனது மனைவியின் சொத்தை கைப்பற்றிய பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பது தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.



