அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை புரிந்து கொள்வது எவ்வாறு?

Prasu
2 years ago
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை புரிந்து கொள்வது எவ்வாறு?

அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விஷயத்தில் அல்லாஹ்வும், அவனது தூதரும் அவனுக்கு இருப்பதாக உறுதி செய்துள்ள பெயர்களையும், பண்புகளையும் எப்படி என்று கூறாமலும், வடிவம் கொள்ளாமலும் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறே அல்லாஹ்வும், அவனது தூதரும் அவனுக்கு இல்லை என்று மறுத்துள்ள பண்புகளை அவனுக்கு இருப்பதாக வாதிடாமலும், திரித்துக் கூறாமலும் நம்பிக்கை கொள்ள வேண்டும். 
                                                
  لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ 
அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் : 42:11) 
                                                
குர்ஆன் மற்றும் ஸுன்னா ஆதாரங்களில் இடம் பெரும் வார்த்தைகளின் பொருளை நம்பிக்கை கொள்வதுடன் அதன் அர்த்தத்தை மறுக்கவோ எப்படியென்று கூறவோ கூடாது. 
                                                
அல்லாஹ்வுக்கென்று அழகிய பெயர்கள், பண்புகள் உள்ளன. அவைகளுக்கு ஒப்புவமானம் கூறாது. அதன் கருத்துகளை திரித்துக் கூறாது அதன் கருத்துகளை சிதைக்காது அப்படியே நம்ப வேண்டும். 
அதாவது அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் எப்படி வர்ணித்துள்ளானோ, அல்லாஹ்வுடைய தூதர் நபி முஹம்மத்(ஸல்) எப்படி அல்லாஹ்வைப் பற்றி வர்ணித்து கூறினார்களோ அப்படியே நம்ப வேண்டும். 
அல்லாஹ் தனக்கு இருப்பதாக கூறிய பண்புகள் இரண்டு விதமாக உள்ளன, ஒன்று அல்லாஹ்வின் உள்ளமையுடன் (தாத்) தொடர்புடைய பண்புகள், இரண்டாவது அவனது செயல்களைச் சார்ந்த பண்புகள். 
                                                
அல்லாஹ்வின் கை: 
 قَالَ يٰۤـاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ‌  اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ 

“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான். (அல்குர்ஆன் : 38:75) 
                                                
 وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ‌  غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا‌ ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ‌ 
“அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; (அல்குர்ஆன் : 5:64) 
                                                
தனக்கு இரு கைகள் இருப்பதாக மேற்கூறிய வசனங்களில் கூறிக்காட்டுகிறான். 
                                                
அல்லாஹ்வின் முகம்: 
 وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌ 

மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (அல்குர்ஆன் : 55:27) 
                                                
அல்லாஹ்வின் பாதம்: 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
(நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னம் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!' என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.  
அறிவிப்பாளர்:  அனஸ் இப்னு மாலிக்(ரலி) 
ஸஹீஹ் புகாரி : 6661,4848. 
                                                
அல்லாஹ்வின் கண்: 
 وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ‏

 மேலும், (நபியே!) உமதிரட்சகனின் தீர்ப்பை (எதிர்பார்த்துப்) பொருத்திருப்பீராக! நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர், (ஆகவே, அவர்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்து விட முடியாது.) மேலும் (நீர் நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமதிரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன்: 52:48) 
                          
 وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ‏
 மேலும் “நம்முடைய கண்கள் முன்பாகவே, நம்முடைய அறிவிப்பின் படி ஒரு கப்பலை நீர் செய்யும், அக்கிரமம் செய்தவர்களைப் பற்றி (இனி நீர் என்னுடன் பரிந்து) பேசாதீர், நிச்சயமாக அவர்கள் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்படுகிறவர்கள்” (என்றும் அறிவிக்கப்பட்டது). (அல்குர்ஆன்: 11:37)

                                                
அல்லாஹ்வின் பேச்சு: 
  مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌
 
அவர்களில்  அல்லாஹ் பேசியவர்களும்  உள்ளார்கள். (அல்குர்ஆன் : 2:253) 
                                                
 وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ‌  وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا 
(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:164) 
                                                
இது போன்ற பண்புகள் குர்ஆனிலும், ஸுன்னாவிலும் சொல்லப்பட்டுள்ளன. அவைகளுக்கு மனித படைப்புகளுக்கு ஒப்பாக்கி அல்லது உவமானம் கூறி கருத்துக்களை திரித்து கூறக்கூடாது. 
அது போல், அல்லாஹ் கேட்கிறான், அல்லாஹ் பார்க்கிறான், அல்லாஹ் சிரிக்கிறான், அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கி வருகிறான், அல்லாஹ் பெருமை கொள்கிறான், அல்லாஹ் கோபம் கொள்கிறான், அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான் போன்ற பண்புகளையும் திரித்து கூறாது எந்த ஒன்றோடும் உதாரணம் கூறாது நம்ப வேண்டும். 
மேன்மையும், கண்ணியமுமிக்க அல்லாஹ் தனக்குரிய விதத்தில் தன்னுடைய பண்புகளுக்குரியவனாக இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.