இலங்கையில் முழுமையாக தடை செய்யப்படும் பொருள்! மீறினால் சட்ட நடவடிக்கை..!
இலங்கையில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து பொலித்தீனால் உற்பத்தி செய்யப்படும் உக்கலடையாத லன்ச் ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன், அவற்றை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் என்பனவற்றிற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
உடனடியாக பாவனையில் இருந்து நீக்குவதற்கான, மேலும் எட்டு வகையான பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய பட்டியலை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காக குறித்த அமைச்சரவை பத்திரத்தில் இன்று கைச்சாத்திடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு தடவை மாத்திரம் பாவனைக்கு உட்படுத்தப்படும் உரிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் கரண்டிகள், முள்கரண்டி, யோகட் கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள், பத்திகள் மற்றும் திரி ஆகியவற்றை பொதியிடும் பொலித்தின் உறைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் ஆகியவை இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.