காவியுடையில் நடைபயணம் மேற்கொண்டவர் முன்னாள் மொட்டுக் கட்சி உறுப்பினர்? சமூக வலைத்தளங்களில் சர்ச்சை!
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக காவியுடை அணிந்து நடைபயணத்தை ஆரம்பித்த நபர் தொடர்பில் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சிவுருக்கு நீதி' என்ற தொனிப்பொருளில் கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணத்தில், குறித்த நபர் பௌத்த பிக்கு அல்லர் என்றும், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பலாங்கொடை முன்னாள் நகர சபை உறுப்பினர் கிரேஷன் கெரமினியே என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இதற்கு முன்னரும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றதாகக் கூறப்படும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
குறித்த நடைபயணம் அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சிங்கள பௌத்த உணர்வுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் தெரிவித்திருந்தார்.
கடுகண்ணாவை பரமிதா பௌத்த நிலையத்திலிருந்து கேகாலை வழியாக கொழும்பைச் சென்றடைவதே நடைபயணத்தின் திட்டமாக இருந்துள்ளது.
நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டபோது சுமார் ஆறு பேர் மட்டுமே கலந்துகொண்டதாகவும், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது குறித்த நபர் அதிருப்தி வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், பௌத்த காவியுடை மற்றும் மத அடையாளங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறித்த நபரின் அடையாளம் மற்றும் நடைபயணத்தின் உண்மையான நோக்கம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாகியுள்ளது.