கனடாவில் மருத்துவ கஞ்சா உற்பத்திக்கான சான்றிதழ்களை தவறாக பயன்படுத்திய மூவர் கைது
கனடாவின் மொண்ட்ரியால் நகருக்கு கிழக்கே உள்ள பல விவசாய நிலங்கள் மீது காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கான கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கனடிய சுகாதார அமைப்பின் மருத்துவக் கஞ்சா உற்பத்திக்கான சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி இயங்கி வந்த குற்றவியல் கும்பல் ஒன்றை இலக்கு வைத்து, இந்த கோடைக்காலத்தில் தொடங்கப்பட்ட புலனாய்வு விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
60க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் இணைந்து ஐந்து வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் மூன்று வாகனங்களில் நடத்திய சோதனையில் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், சுமார் 4,299 பவுண்ட் உலர்ந்த கஞ்சா மொட்டுகள், சுமார் 13 பவுண்ட் ஹாஷிஷ் போதைப்பொருள், சுமார் 480 மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகள், குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட 4 வாகனங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.