புதிய தலைமுறையினருடன் அரசியலை மறுசீரமைக்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்!

#SriLanka #Ranil wickremesinghe #LANKA4 #President #Generation #national
Abi
2 hours ago
புதிய தலைமுறையினருடன் அரசியலை மறுசீரமைக்க வேண்டும் – ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல்!

பாரம்பரிய அரசியல் அணுகுமுறைகளைக் கொண்டு இனிவரும் காலங்களில் தேர்தல் வெற்றிகளைப் பெற முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, சிறிகொத்தவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP), ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஒன்றிணைவதன் மூலம் தேர்தல் வெற்றியைப் பெற்றுவிடலாம் என சிலர் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய கூட்டணி மட்டும் வெற்றியை உறுதிப்படுத்தாது எனச் சுட்டிக்காட்டினார்.

மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சியின் அடையாளத்திலும் கட்டமைப்பிலும் முழுமையான மறுசீரமைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, புதிய தலைமுறையினரான Gen Z மற்றும் மிலேனியல் (Millennial) இளைஞர்களை அரசியல் செயற்பாடுகளில் இணைத்துக்கொள்வது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது 15 முதல் 16 வயதுடையவர்களாக இருப்பவர்கள் எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியலில் இணையும் நிலையில், புதிய தலைமுறையினரின் அரசியல் எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய தலைமுறையினரை உள்ளடக்கிய சுமார் 8 மில்லியன் பேர் கொண்ட வாக்காளர் பிரிவை கவனத்தில் கொண்டு அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், "ஒரு புதிய பிம்பத்தையும் அதற்கு ஏற்ற மறுசீரமைப்பையும் உருவாக்க வேண்டியுள்ளது. உலக அரசியல் மாறிக்கொண்டிருக்கிறது.

புதிய தலைமுறையினரை நாம் புறக்கணித்துவிட்டு முன்னோக்கிச் செல்ல முடியாது. Gen Z மற்றும் மிலேனியல் தலைமுறையினரை எமது அரசியல் பயணத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். 

பாரம்பரிய முறைகளிலேயே தொடர்ந்து பயணித்தால் இந்தப் புதிய தலைமுறையினரை இழக்க நேரிடும். அதேவேளை, புதிய தலைமுறையினர் இணையாவிட்டால், வெற்றிபெற முடியாது என்ற எண்ணத்தில் பாரம்பரிய ஆதரவாளர்களும் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகக்கூடும்.

UNP மற்றும் SJB ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தால் வெற்றிபெறலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், தற்போது அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. புதிய வாக்காளர்களைக் கவர முடியாவிட்டால் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது.

எனவே, பாரம்பரிய அரசியல் அணுகுமுறைகளைக் கைவிட்டு புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்" எனத் தெரிவித்தார்.

புதிய தலைமுறையினரின் பங்கேற்புடன் கட்சியின் அரசியல் பிம்பத்தையும் செயற்பாட்டு முறைகளையும் மறுசீரமைக்க வேண்டும் என்பதே ரணில் விக்ரமசிங்கவின் உரையின் முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கட்டமைப்பில் Gen Z UNP மற்றும் Millennium UNP எனும் புதிய தலைமுறைப் பிரிவுகளையும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!