நிலக்கரி ஊழல் மோசடி: மார்ச் மாதத்திற்குப்பின் மின்தடை ஏற்படும் அபாயம்!
லங்கா நிலக்கரி நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தவை என்பது அம்பலமாகியுள்ள நிலையில், இதன் பின்னணியில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விடவும் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நிலக்கரி இறக்குமதிக்கான கொள்முதல் செயல்முறையின் ஆரம்பத்திலிருந்தே பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுவாக 42 நாட்கள் வழங்கப்பட வேண்டிய கொள்முதல் கால அவகாசம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டதன் மூலம் பல நிறுவனங்களின் பங்கேற்பு தடுக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியற்ற சிறிய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அடிப்படை நிபந்தனைகள் அரசாங்கத்தினால் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான 5900 kcal தரம் கொண்ட நிலக்கரி இறக்குமதி செய்யப்படவில்லை என்பதைத் தாம் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் ஏற்கனவே வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், தரப்பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்கு முன்னரே நிலக்கரி உலைகளுக்குச் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவிலிருந்து கிடைத்துள்ள அறிக்கைகளின்படி இந்த நிலக்கரி தரம் குறைந்தது என்பது உறுதியாகியுள்ளது. தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், முழுமையான மின் உற்பத்தியைச் செய்ய முடியாமல் போவதால் ஏற்படும் மின்சாரப் பற்றாக்குறையை ஈடுசெய்ய டீசல் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டுக்கு ஏற்படும் பாரிய நிதி இழப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையான மதிப்பீடு எதுவும் செய்யப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டார். முதல் நிலக்கரி கப்பலுக்கு 2.1 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதில் எவ்வித வெளிப்படத்தன்மையும் இல்லை என்றும், தரம் குறைந்த நிலக்கரி காரணமாக டெண்டரை இரத்து செய்ய வேண்டிய நிலையைத் தவிர்க்கவே அரசாங்கம் இவ்வாறான அபராதங்களை அறவிட்டு வருவதாகவும் மரிக்கார் தெரிவித்தார்.
தற்போது வந்துள்ள மூன்றாவது கப்பலிலும் தரம் குறைந்த நிலக்கரி இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், தரமற்ற நிலக்கரி பயன்பாட்டினால் மார்ச் மாதத்திற்குப் பிறகு நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரித்தார்.
ஒரு ரூபாயைக் கூட திருட மாட்டோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது 'ஸ்பொட் டெண்டர்' மூலம் அதிக விலைக்கு நிலக்கரியை வாங்கத் திட்டமிடுவது மற்றொரு பாரிய மோசடிக்கான வழி எனச் சாடிய அவர், இந்த ஊழலை மூடிமறைக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்