யாழில் இணையவழி கற்றல் செயற்பாடுகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இணையவழி கற்றல் செயற்பாடுகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (30.12) நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி மேற்பார்வையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப மற்றும் வள ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் செந்தில்மாறனின் தன்னார்வ முயற்சியால், ஆரம்பத்தில் தீவக வலயத்தின் ஒரு சில பாடசாலைகளுக்காகத் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் அவ்வலயம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டு, தற்போது வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 151 பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். எனினும், அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' பேரிடர்ச் சூழலுக்குப் பின்னர் மாணவர்களின் பங்குபற்றல் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது.
தற்போது அந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஆரம்பக்கால எண்ணிக்கையை நாம் மீண்டும் எட்டவேண்டியது அவசியமாகும்” எனக் கூறியுள்ளார்.
இத்திட்டத்தை முன்னெடுப்பதில் ஒவ்வொரு வலயத்திலும் காணப்படும் சவால்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இணைய வசதிகள் இன்மை மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்கள் பிரதான தடையாக உள்ளமை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஆளுநர், இணைய வசதியற்ற பாடசாலைகளின் விவரங்கள் கிடைக்கப்பெற்றதும், அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று, தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை பேரிடரினால் பாதிக்கப்பட்ட, இவ்வகுப்புக்களில் பங்குபற்றிய 221 மாணவர்களுக்குத் தலா 3,500 ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. மடிக்கணினி மூலம் இக்கற்றல் செயற்பாட்டை முன்னெடுத்த 3 பாடசாலைகளுக்கு யாழ். இந்துக் கல்லூரியால் பல்லூடக எறிவிகள் (Multimedia Projectors) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இணைய வசதி அறவே இல்லாத பிரதேசங்களில் உள்ள மாணவர்களை, ஒரு மையப் பாடசாலையில் ஒன்றிணைக்க முடியுமாயின், அப்பாடசாலைக்குச் செய்மதி ஊடான இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் யாழ். இந்துக் கல்லூரித் தரப்பு தயாராக உள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.