குறுகிய நோக்குடைய அரசியல்வாதிகளின் வாத பிரதிவாதங்களும் தமிழர் தேசத்தின் இலக்குகளும்!
தமிழ் தேசத்தின் ஒரு பகுதியாகிய நாம், எமது மக்களின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக விளங்கும் காரணிகள்—இன அழிப்பு, கட்டமைக்கப்பட்ட அடக்குமுறை, அடையாள அழிப்பு—இவற்றை மையமாகக் கொண்டு அவற்றை எதிர்கொள்ளத் தெளிவான மூலோபாயங்களையும் செயல்முறைகளையும் உருவாக்க வேண்டும்.
கடந்த காலங்களில் மட்டும் அல்லாது இன்றுவரை, அரசும் அதன் நிறுவனங்களும், சில உலகளாவிய சக்திகளும், சில நேரங்களில் தமிழ் சமூகத்தின் சில பிரிவுகளும்—தெரிந்தோ தெரியாமலோ—திட்டமிட்ட வகையில் பல கவனச் சிதறல்களை உருவாக்கியுள்ளன.
இவை அனைத்தும் எமது கூட்டு போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே அமைந்தவை. அத்தகைய ஒரு யுக்தியாக, சாதி, மதம், பிராந்திய வேறுபாடு, சமய அடையாளம் ஆகியவற்றின் மூலம் தமிழ் சமூகத்திற்குள் பிளவுகளை உருவாக்குவது காணப்படுகிறது.
சமீப காலங்களில், இலங்கை முழுவதையும் பாதிக்கும் பொதுப் பிரச்சினையான ஊழலும், தமிழர் ஒற்றுமையை உடைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு திட்டமிட்டும் கணக்கிட்டும் மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகள் எமது தேசிய போராட்டத்தை தளர்த்துகின்றன. இதன் விளைவாக, தமிழ் தேசம் அனுபவித்த கடுமையான அடக்குமுறைகளும் துன்புறுத்தல்களும், இலங்கைக்குள்ளும் சர்வதேச அரங்கிலும் பிரதான விவகாரமாக இருந்து விலகி, அடிப்படை அநீதிகளிலிருந்து கவனம் சிதறும் அபாயம் உருவாகிறது.
எமது தேச நிர்மாண காலகட்டங்களில் (defacto state) ஊழல், சாதியாதிக்கம், மதவாதம், பிரதேச வாதம் மற்றும் பிற பிரிவினைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்குப் பதிலாக, கல்வி, பொருளாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்ற வாய்ப்புகளில் இருந்து நீண்ட காலமாக வஞ்சிக்கப்பட்ட விளிம்புநிலை மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு நிறுவனக் கட்டமைப்புகள் மூலம் சமூக மேம்பாடு இயல்பாகவும் நிறுவன ரீதியாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைய நிலையில் எமது தேசத்தை வலுப்படுத்தும் உண்மையான பங்களிப்புகள், அர்த்தமுள்ள செயல்களாக அல்லாது, தேசப்பற்றை வெளிப்படுத்தும் அடையாள ரீதியான அல்லது நடிப்பு சார்ந்த செயற்பாடுகளாக மட்டுமே சுருங்கி வருகின்றன.
எமது மூலோபாய முன்னுரிமைகளை மீண்டும் தெளிவுபடுத்தி, எமது தேசத்தின் எதிர்காலத்திற்கு உண்மையாகச் சேவை செய்யும் செயல்களில் நாம் உறுதியாக ஈடுபட வேண்டும்.
தமிழ் தேசிய இலக்குகளைக் குன்றச் செய்ய அல்லது ஓரங்கட்ட உருவாக்கப்படும் கவனச் சிதறல்களுக்கு நாம் ஊக்கம் அளிக்கக் கூடாது.