டித்வா அனர்த்தத்தினால் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்!
இலங்கையில் ஏற்பட்ட டித்வா வெள்ளப் பேரிடரால் சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பிரிவு சங்கத்தின் தலைவர் மைதிலி ரதீஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் சமூக விஞ்ஞான பிரிவு நடாத்திய பேரிடரை எதிர்கொள்வோம் நல்லூரில் வெள்ளம் கருத்தமர்வு நிகழ்வில் தலைமை உரையை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பாரிய பேரிடராக டித்வா வெள்ளப் பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்த இலங்கையிலும் அதன் பாதிப்புக்கள் உணரப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 650 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கின்ற நிலையில் சுமார் 20 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
4 இலட்சத்து 73 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5700 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது.
சுமார் 16 ஆயிரம் கிலோமீட்டர் வீதிகள் சேதமடைந்துள்ள நிலையில் 270 கிலோமீட்டர் புகையிரத பாதைகளும் சேதம் அடைந்த நிலையில் 480 மேற்பட்ட பாலங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இலங்கையின் பொருளாதார இழப்பு 6 தொடக்கம் 7 பில்லியன் அமெரிக்க டாலராக எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் 20 வீத பயிர்ச்செய்கை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தை பொருத்தவரையில் மன்னார் முல்லைத்தீவு , வவுனியா , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டம் குறைந்த அளவு பாதிப்பையே எதிர்நோக்கி இருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.