தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்க கூடாது: ஞானசார தேரர்
விடுதலைப்புலிகளுடன் இணைந்து அஸ்மின் மீண்டும் வடக்கு, கிழக்கை மற்றொரு பலஸ்தீனாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்க கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த, சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பௌத்தர்களின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும்.
இதுபோன்ற விஷயங்களைக் கையாளும் போது அரசாங்கம் விவேகத்துடனும் தூரநோக்குடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு குழுக்களும் சக்திகளும் தமது தேவைக்கேற்ப நிலைமையைக் கையாள இது வழிவகுக்கும். கனடாவில் வசிக்கும் அயூப் அஸ்மின் என்ற நபர் திருகோணமலை சம்பவத்தின் போது தனது முகநூலில் 'நீங்கள் இப்படியே தொடருங்கள், சிலைகளை உடைக்கும் ஒரு இயக்கம் உருவாகும்வரை' எனப் பதிவிட்டிருக்கின்றார்.
இந்த நபர் ஜமாஅத் அமைப்பில் மாணவர் இயக்கத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருக்கின்றார். அவ்வாறு செயற்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், பட்டியலூடாக 5 ஆண்டுகள் மாகாணசபை உறுப்பினராகக் காணப்பட்டார்.
இவர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மற்றும் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான நபராவார். அவர் தலைமை தாங்கிய மாணவர் குழுவே மாவனெல்லையில் உள்ள புத்தர் சிலைகளை அழித்தன.
அஸ்மி உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம். இலங்கையை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிப்பதுடன், வெளிநாட்டில் இருந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அதிதீவிரவாதக் கருத்துக்களை நோக்கித் தள்ளுவதாகவும் சந்தேகிக்கின்றோம். எனவே நல்லாட்சியின் போது இடம்பெற்றதைப் போன்று உலகளாவிய பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய நபர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு விரிவடைந்தன என்பதை விசாரிக்க ஒரு விசேட ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். பெரும்பான்மை சமூகத்தினருக்கு மனவேதனையை ஏற்படுத்திய நடவடிக்கைகளாலேயே முந்தைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, நாடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எதிர்கொண்டது.
திருகோணமலை போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து பௌத்த சிங்கள சமூகத்திலிருந்து வரும் ஆரவாரமும் கோபமும், அதிதீவிரவாதத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களால் தமக்கான தீவிரவாத கருத்துகளுக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை விரைவாகச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும், பொலிஸால் கையாளப்பட வேண்டிய விடயங்களில் தேவையற்ற விதத்தில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். அவர்களது கோபமான எதிர்வினைகள், அவர்களை இனவாதிகள் அல்லது மத அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்த விரும்புபவர்களின் கைகளுக்குள் விளையாட வழிவகுக்கும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கனடாவில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவிக்கப்பட்டன.
30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் செய்த பல படுகொலைகளுக்குப் பிறகும் அவர்களை நினைவுகூர வேண்டிய தார்மீக அதிகாரம் இருக்கின்றதா? இந்த புதிய சித்தாந்தங்களை இப்போதே தோற்கடிக்கத் தவறினால், நாடு தவிர்க்க முடியாமல் ஒரு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும்.
அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் தூண்டப்பட அனுமதித்தால், முந்தைய அரசாங்கம் சந்தித்த அதே வீழ்ச்சியை இந்த அரசாங்கமும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன். விடுதலைப்புலிகளுடன் இணைந்து அஸ்மின் மீண்டும் வடக்கு, கிழக்கை மற்றொரு பலஸ்தீனாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்க கூடாது.
13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது. பிரதேசசபையின் அனுமதியின்றி தொல்பொருள் பெயர் பலகையை நிறுவ முடியாது என முரண்படும் நிலைமைக்கு அரசாங்கம் இடமளிக்கின்றதா? இந்த நிலைமைகள் இப்போதே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்றார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
