தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியவர்களுக்கு பிணை!
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (22) வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்குப் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.
வாழைச்சேனை பிரதேசசபைக்கு உட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதி பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாகத் தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் அப்பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.
இதுகுறித்து தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.
அதற்கமைய வாழைச்சேனை பிரதேச சபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக் குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்று முன்தினம் கைப்பற்றிய வாழைச்சேனை பொலிஸார், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்தனர்.
அதேவேளை இதனுடன் தொடர்புபட்ட வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன், பிரதி தவிசாளர், இரண்டு உறுப்பினர்கள் உட்பட நால்வர் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இந்நிலையில் அவர்கள் சார்பில் நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தனது தரப்பினர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பொருத்தமற்றவை என நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அத்தோடு 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபை சட்டத்தின்கீழ் வீதிகள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேசசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சட்டத்தின் பிரகாரம் பிரதேசசபை தவிசாளர் அதிகாரமுடையவர் எனவும் சுட்டிக்காட்டினார். எனவே அந்த அதிகாரத்துக்கு அமைவாகச் செய்யப்பட்ட விடயத்தை 'பெயர்ப்பலகைகளை அகற்றினார்' என்று குற்றச்சாட்டாக முன்வைக்கமுடியாது எனவும் சுமந்திரன் வாதத்தை முன்வைத்தார்.
அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் அனுமதியைப்பெற்றே பெயர்ப்பலகை இடப்படவேண்டும் என்பதை சுமந்திரன் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, அதனை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதுடன் எதிர்காலத்தில் முறையான அனுமதியைப்பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
அவ்வாறு முறையாக அனுமதி கோரும்போது அதனை சபையில் சமர்ப்பித்து சபையினால் முறையான அனுமதியை வழங்கமுடியும் என்று சுமந்திரன் கூறியதன் அடிப்படையில் வழக்கு சுமுகமாக தீர்க்கடலாம் என்ற காரணத்தினாலும், பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பிணைவழங்ககூடிய காரணங்களைக் கொண்டிருப்பதனாலும் நீதிவானால் ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதற்கமைய வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் உள்ளடங்கலாக ஐந்து பேரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
(வீடியோ இங்கே )
அனுசரணை
