பொது வேட்பாளர் எனும் அடையாளமும் சிவில் சமூக ஒருங்கிணைப்பும்!

#SriLanka #Tamil People
Mayoorikka
3 weeks ago
பொது வேட்பாளர் எனும் அடையாளமும் சிவில் சமூக ஒருங்கிணைப்பும்!

தமிழ்த் தேசியத்தளத்தில் மக்கள் அமைப்புகளை ஒருங்கிணைத்து கொள்கை சார்ந்த மக்கள் திரட்சியுடன் காலதாமதமின்றி நகர வேண்டியதன் அவசியத்தை தமிழ் மக்களின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள பல பிரிவினரும் உணர்ந்து கொண்டுள்ள காலமிது.

 போருக்கு பின்னரான காலத்தில், பிரதானமாக தமிழ் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு கிடைத்த ஜனநாயகத்தளங்களில் நின்று அரசியல் அடைவுகளை எட்டுதல் மற்றும் மக்களை அமைப்பு வடிவங்களுக்குள் ஒருங்கிணைப்பது என பல அவசியமான பணிகளை செய்யத் தவறியிருப்பதுடன், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் மாகாண சபை மூலம் தமக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி சாதித்திருக்கக் கூடிய பல விடயங்களையும் கோட்டை விட்டதுடன், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி என்னும் நிலையில் இருந்தும் கூட செயலற்று இருந்திருக்கின்றனர். அடிப்படையில் அரசியல் தலைமையற்று இருக்கும் தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் சமூக உருவாக்கமும், வடக்கு கிழக்கில் கிராமிய மக்கள் அமைப்புகள் தொடக்கம் நில உரிமை, அரசியல் உரிமைகளுக்காவும் இயங்கிவரும் பரந்துபட்ட அமைப்புகளை சிவில் சமூகம் என்னும் தளத்தில் ஒருங்கிணைப்பது தமிழ் சமூக ஆர்வலர்கள், அறிவுசார் பிரிவினரின் பிரதான பணியாக இருக்கிறது.

 தமிழ் தேசியத்தளத்திலான சிவில் சமூக ஒருங்கிணைப்பு என்பது தமிழ் மக்களின் தேசிய விருப்புகளையும், அடைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ் சமூகம் புறம், அகம் என்னும் தளங்களில் எதிர்கொள்ளும் அத்தனை அடக்குமுறைகளுக்கும் எதிராக இயங்கும் அமைப்புகள், கிராமங்களின் அடிப்படை மக்கள் அலகுகளாக இருக்கும் அமைப்புகள், அறிவுசார் பிரிவுகள், கல்விசார் சமூகத்தினர் என அனைவரையும் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டங்கள் சில அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு இவ்வகை சிவில் சமூக ஒருங்கிணைப்பு என்பது கீழிருந்து மேல் நோக்கிய கட்டுமானமாக நகர்ந்து வருகிறது.

 தமிழ் சமூகத்தின் ஆழமான அரசியல் புரிதல் கொண்ட பிரிவாக நீண்ட காலமாக தமது கருத்துகளை பகிர்ந்து வருபவர்கள், தமிழ் தேசம் ஒரு ஒருங்கிணைந்த சக்தியாக கீழிருந்து மேலெழ வேண்டும் என்பதனை தொடர்ச்சியாக இடித்துரைத்து வருபவர்கள் என்னும் வகையில் தமிழ் சமூகத்திற்கு மிகவும் அவசியமான பிரிவினராக இருப்பவர்களின் முயற்சியில், நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்பதனை ஒரு அடையாளமாகக் கொண்டு தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்சியுற வைக்கும் இலக்குடன் ஒரு சிவில் சமூக இணைப்பை ஏற்படுத்த விழைகின்றனர்.

 இந்த முயற்சி பொதுத்தளத்தில் பாராட்டப்பட வேண்டிய அதேவேளை இந்த இணைப்பை உருவாக்குவதில் முன்னிற்கும் அரசியல் புரிதல் கொண்ட நபர்கள் தொடர்ச்சியாக இடித்துரைத்து வந்தது போல தமிழ் தேசியத் திரட்சி என்பது சிவில் சமூகத் தளத்தில் கீழிருந்து அடிப்படை மக்கள் அமைப்புகளை கட்டமைத்து மேல்நோக்கி கொண்டு செல்லாது, இந்த அறிவுசார் தனிநபர்களின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் இருக்கும் சிவில் சமூகம் என்னும் வரையறைக்குள் தங்களை அடக்கிக் கொள்ளக் கூடிய அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் ஆரம்பித்து படிப்படியாக சில அடிப்படை மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு இவர்களின் பயணம் ஆரம்பித்துள்ளமை சுட்டிக்காட்டப் படவேண்டியுள்ளது.

 தமிழ் மக்களை ஒரு தேசமாக அணிதிரள வைப்பதற்கான ஒரு பொதுத்தளத்தை உருவாக்க எத்தனிக்கும் சமூகப் பொறுப்புள்ள அரசியல் புரிதல் கொண்ட பிரிவொன்றினால் தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கப்படும் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு என்னும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டானது, எந்தவகை மக்கள் அமைப்பு வடிவங்களுக்குள்ளும் உள்ளடங்காது, ஜனநாயக பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்காது, உருவாக்கப்பட்ட கூட்டின் தலைமை பொறுப்பை தாமாகவே எடுத்துக் கொண்டதுடன், தன்னிச்சையான முடிவாக ஒரு கட்டமைப்பை நோக்கி நகர்ந்து "தமிழ் மக்கள் பொதுச்சபை" என்னும் அமைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது.

 இந்த அமைப்பு "தலைமை ஒருங்கிணைப்புக் குழு", "வழிகாட்டல் குழு" என்னும் இரு முக்கிய அங்கங்களுடன் பல உப குழுக்களையும் தன்னகத்தே உருவாக்கியிருக்கிறது. இதன் அடுத்த அமைப்பு வகை நகர்வாக ஏழு அரசியல் கட்சிகளை பங்காளிகளாக இன்னுமொரு தளத்தில் இணைத்துக் கொண்டு "தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு" என்னும் அமைப்பு உருவாக்கத்தை செய்துள்ளது. இந்தக் கட்டுமானத்தில் இருந்து தான் பொது வேட்பாளர் தெரிவு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் தொடர்பான விஞ்ஞாபனம் மற்றும் திட்டமிடல் அனைத்தையும் இந்த அமைப்பு செயற்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 இலங்கை ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையில் புறக்கணிக்கும் இந்தக் கட்டுமானமானது தமிழ் பொது வேட்பாளர் என்பதை நபர் சார்ந்த ஒரு விடயமாக முன்னிறுத்தாது தமிழ் தேசியத் திரட்சிக்கான ஒரு கொள்கை வழி அடையாளமாக முன்வைக்கிறது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்னும் கொள்கை மற்றும் அமைப்பியல் தளங்களை எவ்வாறு அணுகுவது என்பது தான் எமக்கு இந்த முயற்சியில் இறங்கியிருக்கும் அறிவுசார் தமிழ் தேசியர்களுடன் இருக்கும் முரண்பாடாகும். ஒரு மக்கள் கூட்டத்தை தேசமாக அணிதிரளச் செய்வது என்பது ஒரு அறைகூவல் சம்பந்தப்பட்ட விடயமல்ல; அது ஒரு சமூக உருவாக்கம்.

 அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூகத் தளங்களில் மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தி நீண்ட காலத்தில் அமைப்பாக்கம் செய்யும் ஒரு பெரும் வேலை. ஜனாதிபதித் தேர்தல் என்னும் ஒரு நிகழ்வை வைத்தும் ஒரு பொது வேட்பாளர் என்னும் அடையாளத்தை வைத்தும் ஒரு மக்கள் கூட்டத்தை தேசியத் திரட்சி பெறச் செய்துவிட முடியும் என்று நம்புவது அரசியல் அப்பாவித்தனமாகவே புரிந்து கொள்ள முடியும்.

 மக்கள் மத்தியில் அடிப்படையான வேலைகளை செய்யாது, அடிப்படை அலகுகளில் இருந்து உருவாகும் தலைமைக்கு மாற்றாக, சில நபர்களின் "நல் நோக்கங்களில்" இருந்து உருவாக்கப்படும் அமைப்புகள் மக்களில் இருந்து தனிமைப்பட்ட அதிகாரத்துவ தன்மை கொண்டவையாக ஈற்றில் பரிணமிப்பது தவிர்க்க முடியாத நடைமுறையாகும். குறுகிய கால இலக்கில் சிவில் சமூக இணைப்புகள் என்பன அடிப்படையில் பலவீனமானவை. சிவில் சமூக இணைப்பு என்பது சுதந்திரமான மக்கள் அமைப்புகளின் இணைப்பு. இவற்றை இணைக்கும் வடம் என்பது கொள்கை வகைப்பட்ட இணைவும், தொடர்ச்சியான வேலைகளினூடக உருவாகும் நம்பிக்கையுமாகும். 

இவ்வகை பண்புகளை தன்னகத்தே பெரிதளவு கொண்டிருக்காத "தமிழ் மக்கள் பொதுச்சபை" என்னும் தளம் தன்னுடன் கூடவே ஒப்பீட்டளவில் பலம் அதிகமான அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு பொது முகப்பை உருவாக்குமாக இருந்தால் அது பலம் கூடிய அரசியல் கட்சிகளின் முகமாகவே அமையும் என்பது "தமிழ் மக்கள் பேரவை" என்னும் தமிழர் கட்டுமானம் எமக்கு கற்றுத் தந்த நேரடிப் பாடமாக இருப்பது இந்த அறிவுசார் பிரிவினரின் கண்களுக்கு புலப்படாதது வியப்பிற்குரியதா அல்லது வேறு வழிமுறைகள் தெரியாத பலவீனமா என்று சிந்திக்க வைக்கிறது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை கூட்டு என்பது பயன்படுத்துதல் என்னும் அர்த்தத்தை மட்டுமே கொண்டுள்ளது. "தமிழ் மக்கள் பொதுச்சபை" என்பது தமிழ் தேசிய திரட்சியை உருவாக்கும் சிவில் சமூகங்களின் நிரந்தரமான ஒரு கூட்டில் அமைந்த ஒரு அமைப்பாக இருக்கிறது.

 "தமிழ் தேசியப் பொதுக் கட்டமைப்பு" என்பது பொது வேட்பாளர் என்னும் அடையாளத்தை தேர்தலில் கையாளும் அமைப்பு வடிவமாக இருக்கிறது. 2009ல் தமிழ் தரப்பு ஆயுதப் போராட்டத் தலைமையின் அழிவின் பின்னர், தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும் என்னும் விருப்பில் பல அறிவார்ந்த, அரசியல் ஆளுமையான கருத்துக்களை தமிழ் சமூகத்திற்கு கூறிவந்திருக்கும் அறிவுசார் பிரிவினர் மேற்கண்ட இரு அமைப்புகளை உருவாக்கியதனூடாக தங்கள் அமைப்பியல் பலவீனத்தையும்; பிரமுகர் அரசியல் என்பது அடிப்படை மக்கள் அரசியலில் இருந்து பெரும் இடைவெளியில் இருக்கிறது என்பதையும் மீண்டும் நிரூபணம் செய்துள்ளது.

 விமர்சனங்கள், முரண்பட்ட கருத்துகள் இருக்கின்ற பொழுதிலும், "தமிழ் மக்கள் பொதுச் சபை" என்பது தமிழ் தேசியத்தை நேசிப்பவர்களின், தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டும் வேணவாவில் இருப்பவர்களின் நட்பு தளம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் மக்களின் தேசிய நலனில் இருந்து உருவாகும் அமைப்புகள் சரியான திசைவழியையும், அடித்தளங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அக்கறையில் இருந்து எழும் விமர்சனங்களாகவே இவை அமைகின்றன. 

அரசியல் தலைமையற்ற, அரசற்ற, யுத்தத்தின் வடுக்களை இன்னும் ஆற்றிக் கொள்ள இயலாத தமிழ் சமூகத்தில் ஒரு அமைப்பு உருவாக்கம் என்பது மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அவரவர் விருப்பத்திற்கு கட்டுமானங்களை உருவாக்கி பரிசோதனை செய்ய அவகாசம் தரும் களமாக தமிழ் தேசியத் தளம் இல்லை என்பதனை தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள செயற்பாட்டாளர்கள் அனைவரும் உணருவது அவசியம்.

 புதிய திசைகள்