நல்லூர் மந்திரிமனை குறித்து கோரிக்கை விடுத்த வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்
 
                இடிந்துவிழும் நிலையில் உள்ள நல்லூர் மந்திரிமனையை பேணிப் பாதுகாக்க தமிழ் தேசிய உணர்வுள்ள அனைவரும் கைகோர்க்க முன்வரவேண்டும் என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நாடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் சி.வி.கேசிவஞானம் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அது தற்போது இடிந்து விழும் நிலையில் மிகவும் ஆபத்தான விதத்தில் காணப்படுகின்றது. ஆகவே அதனை பலரும் பேணிப் பாதுகாத்து கொள்ள விரும்புகின்றனர்.
இது தொடர்பில் தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட துறைசார் தரப்பினருடன் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் நல்லூர் மந்திரிமனையை பேணிப் பாதுகாக்க இணக்கம் காணப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் நானும், நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளருமான வைத்தியர் செந்தில் குமரனும் கலந்துகொண்டு துரித நடவடிக்கைக்கு ஆவணசெய்தோம்.
அதன்படி நல்லூர் மந்திரிமனையில் மேற்கொள்ள வேண்டிய புனரமைப்பு திட்டங்களை தொல்லியல் திணைக்களம் வழங்கும். நம்பிக்கை பொறுப்பாளர் வைத்தியர் செந்தில் குமரன் தொல்லியல் திணைக்களத்தின் திட்டத்திற்கு அமைய இதனை புனரமைக்க முன் வந்துள்ளார்.
ஆகவே தமிழ் உணர்வு தேசியம் தொல்லியலில் அக்கறையுள்ள நிலத்திலும் புலத்திலும் உள்ளவர்களும் குறித்த விடயத்தில் கைகோர்த்து நிதி ரீதியிலான உதவியை வழங்கி நல்லூர் மந்திரிமனையை காக்க முன்வரவேண்டும் என்று அவர் மேலும்அழைப்புவிடுத்துள்ளார்.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            