சம்பந்தன் எனும் பெருவிருட்சம் சாய்ந்து போனது சாயுமோ இனி தமிழரசு..!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 months ago
சம்பந்தன் எனும் பெருவிருட்சம் சாய்ந்து போனது சாயுமோ இனி தமிழரசு..!

இரா.சம்பந்தன் எனும் திருமலையின் முதுசிங்கம் தன்னுடைய 91 வது வயதில் தன்னுடைய மூச்சை நிறுத்திக்கொண்டது. சம்பந்தன் திருகோணமலையின் கம்பீரம் தமிழர் அரசியலின் பிதாமகன். இரா.சம்பந்தன் ஐயாவை "பெருவிருட்சம்" என்று அழைப்பதே சாலப்பொருத்தம். 

ஒரு பெருவிருட்சம் தன் நிழலில் தன் கன்றுகளைக்கூட வளரவிடாது. அதற்கு காரணம் அந்த விருட்சத்தின் சுயநலம் இல்லை ஆளுமை. வேரூன்றி விழது பரப்பி நிற்கும் ஒரு பெருவிருட்சத்தின் விருப்பம் என்னவாக இருக்கும்? அதன் நிழலில் பலர் இழைப்பாறவேண்டுமென நினைக்கும் தானே அனைத்தையும் தாங்கும் குடையாகவேண்டுமென நினைக்கும் அந்த நினைப்பு அதன் ஆளுமைப்பரப்பை இன்னுமின்னும் அதிகமாக்கும் அவ்வாறு ஆளுமையால் தன்னை விருட்சமாக்கி கொண்டவரே இரா. சம்பந்தன். 

நான் சம்பந்தன் ஐயாவிடம் பார்த்து வியந்த விடயங்கள் இரண்டு.  ஒன்று அவர் எடுக்கும் முடிவுகள் முடிந்த முடிவுகளாய் இருப்பது,  மற்றொன்று அவரின் சொல்லாற்றல்... சம்பந்தன் அவர்கள் எப்போதும் தன்னுடைய முடிவுகளை முடிந்த முடிபுகளாகவே எடுக்கும் நபர். அவர் தன்னுடைய முடிவுகளை எவரும் மாற்ற அனுமதிப்பதில்லை ஏன் அவரே அவரின் முடிவுகளை மாற்றி மீள் பரிசீலனை செய்வதில்லை அந்தளவுக்கு தன்னுடைய முடிவுகளை முடிந்த முடிவுகளாகவே அவர் எடுப்பதுண்டு.  

சம்பந்தன் ஐயாவின் இந்த முடிந்த முடிவு தன்மையை அவரின் ஆளுமையின் ஒரு அங்கமாக கொள்ளலாம். தமிழரசு கட்சியின் அல்லது கூட்டமைப்பின் எந்த முடிவுகளாக இருப்பினும் அதில் இறுதியும் அறுதியுமான முடிவு சம்பந்தன் அவர்களுடையதே. ஐயா இப்பிடி முடிவெடுத்துவிட்டார். ஐயாவின் முடிவு இதுதான்.  ஐயாவோடு எப்பிடி கதைக்கிறது... ஐயாட்ட எப்பிடி கேட்கிறது... ஐயா என்ன சொல்றார்... ஐயா என்ன நினைப்பார்... ஐயா ஒத்துக்கொள்ளமாட்டார்... இவ்வாறு ஐயாவை சுற்றியே கூட்டமைப்பின் அரசியல் சுற்றிச்சுழன்றுகொண்டிருந்தது. 

இன்று அந்த சக்கரம் தன் சுழட்சியை நிறுத்திக்கொண்டுள்ளது. இரண்டாவது அவரின் பேச்சாற்றல்... சம்பந்தன் ஐயாவின் பேச்சாற்றல் என்பது துல்லியமானது மற்றும் நுட்பமானது எண்ணிப்பேசும் அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் கணைகள் போன்றது. பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவர் பேசும்போது அந்த இடமே அமைதியாக இருக்கும் அவரின் குரல் மாத்திரமே அங்கு ஓங்கி ஒலிக்கும். அவர் புட்டுக்கு புராணம் பாடும் நபர் அல்ல. பாராளுமன்றத்தில் அவர் பேச எடுத்துக்கொண்ட நேரத்தில் அவர் பேசவேண்டியவற்றை தெளிவாகவும் துல்லியமாகவும் ஆணியடித்தால்போல் பேசிமுடிப்பார். 

 பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன்  அடிக்கடி ஒன்றை சொல்வார் ராஜதந்திர பேச்சுக்களை எவ்வாறு பேச வேண்டும் என்பதை தான் கற்றுக்கொண்டது ஐயாவிடம் இருந்துதான் என்பார் அவர் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்தே பேசுவார் என்பார். தான் ஒரு ராஜதந்திரியிடம் தூதுவருடன் பேசப்போவதற்கு முன்பு ஐயாவிடம் ஆலோசனை கேட்டால் என்ன பேசப்போகிறீர்கள் என்று கேட்டுவிட்டு இல்லை இதை அப்பிடி பேசவேண்டாம் இப்படி பேசுங்கள் என ஒரு வசனத்திற்கு பதிலாக அதே அர்த்தம் பொதிந்த ஆனால் காத்திரமான சினேகமான இன்னொரு வசனத்தை சொல்லி இதைப்பயன்படுத்தி பேசுங்கள் என்பாராம். தானே யோசிப்பதாம் ஒரு சொல் அதை மாற்றிப்பயன்படுத்த எவ்வளவு அர்த்தம் மாறுகிறதென. அவ்வளவுக்கு ஒவ்வொரு சொல்லிலும் துல்லியம் காண்பவர் சம்பந்தன்.  

இலங்கை அரசியலில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் இரா.சம்பந்தனுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கிறதெனில் அதற்கு காரணம் அவரின் சொல்லாடல்கள்தான். எதிரில் இருப்பவர்கள் யார் அவருடன் எவ்வாறு பேசவேண்டும் அவர் என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பதை மதிநுட்பம் அறிந்து பேசத்தெரிந்தவர் அவர். இந்த மதிநுட்பமே அவரின் அருகில் ஏனையோரை அணுகவிடாமல் செய்தது. நான் சுமந்திரன் அவர்களிடம் ஒருமுறை கேட்டேன் சேர் சம்பந்தன் ஐயாவை பக்குவமாக பேசி பதவி விலகச்சொல்ல குழுவெல்லாம் அமைக்கின்றனராம் நீங்கள் அவரின் சிஸ்யன் அவர் கைப்பிடித்து அரசியலுக்கு கொண்டுவந்த நபர் எப்போதும் உங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையும் கொண்டவர் நீங்களும் துணிச்சலாக அவருடன் பேசக்கூடியவர் நீங்களே இந்த விடயங்களை கூறி அவரை பதவி விலக கோரலாமே என்று கேட்டேன்.

 அதற்கு அவர் சொன்ன பதில்... ஓம் நான் கேட்கலாம் கதைக்கலாம் அதற்கு ஐயா என்ன பதில் சொல்வார் தெரியுமா சுமந்திரனுக்கு அதில் விருப்பம் இருக்குதோ நீங்கள் தலைவராக வர விரும்புறீங்களோ அப்பிடியென்றா சொல்லுங்கோ நான் பதவி விலகி பொறுப்பை உங்களிட்ட தாரன் என்று சொல்வார்... அதுக்கு நான் என்ன மறுமொழி சொல்றது ஓம் ஐயா எனக்கு அந்த பதவியை தாங்கோ என்று கேட்கிறதோ அப்பிடி கேட்டாலும் அதுக்கும் ஒரு பதில் வச்சிருப்பார் இதுதான் ஐயா. 

அவருடன் பக்குவமாக பேச குழு அமைத்தும் பயன் இல்லை சத்தமாக பேச குழு அமைத்தும் பயன் இல்லை.  அவர் அவர்தான் என்றுசொன்னார் உண்மையும் அதுதான். சம்பந்தனை வாதத்தில் தோற்க வைப்பது மிகக்கடினம் அவரை வழிக்கு கொண்டுவருவதும் மிகக்கஸ்டம். 

நீதியரசராக இருந்தும் விக்கினேஸ்வரன் அவர் முன் நெஞ்சை நிமிர்த்தி பேசமுடியாமல் அன்புள்ள ஷாம் என கடிதம் எழுதியே தன் கருத்தை சொன்னார். (அதற்கு சம்பந்தன் பதில் சொல்லவேயில்லையென்பது வேறு விடயம் ) அவர் டீல்களுக்கு ஒத்துவராத அரசியல்வாதி அதனால்தான் இன்றுவரை கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மண் முழுமையாக அந்நியரிடம் பறிபோகாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சம்பந்தனுடன் முட்டவேண்டி வரும் என்பதாலேயே அரசும் ஏனைய இனக்குழுமங்களும் பலவிடயங்களில் திருகோணமலையை தவிர்த்து வந்திருக்கின்றனர்.  ஒரு பெருவிருட்சமாக அந்த மண்ணை காத்திருக்கிறார் சம்பந்தன். இனி காக்கப்படுமா என்பது சந்தேகமே.  

சரி இனி விடயத்திற்கு வருவோம் இப்போது கூட்டமைப்பை குறிப்பாக தமிழரசு கட்சியை அச்சாணியாக இயக்கிய சம்பந்தன் ஐயாவெனும் பெரு விருட்சம் சாய்ந்துவிட்டது இனி கட்சியின் நிலையென்ன? தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என ஆளாளுக்கு தலைவர் பிரகடனம் செய்யப்போகின்றனரா? உண்மையை சொல்லப்போனால் தமிழரசு கட்சிக்கு தலைவர் இருக்கிறாரோ இல்லையோ செயலாளர் இருக்கிறாரோ இல்லையோ அதெல்லாம் மேட்டரே கிடையாது அது தனிக்கட்சி பிரச்சினை ஆனால் கூட்டமைப்புக்கு தலைவர் அவசியம் இது பாராளுமன்றத்தோடு தொடர்புபட்ட விடயம். தேர்தலொன்றில் போட்டியிட்ட கூட்டணிகள் தமக்கென ஒரு தலைவரை முன்மொழிந்து அந்த தலைவரின் கீழே செயற்படவேண்டியது அவசியமாகும். கட்சிகளுக்கு அப்பால் தேர்தல் கூட்டணி எதுவோ அதன் அடிப்படையில் தான் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் இயங்கும். ஆகவே தலைவர் இன்றி ஒரு தேர்தல் கூட்டணி பாராளுமன்றத்தில் இயங்க முடியாது. 

ஏற்கனவே தமிழரசு கட்சி தலைமைத்துவ விடயத்தில் கட்சி பலகூறாய் பிரிந்து கிடக்கிறது ஒற்றுமையை நிலைநாட்டவேண்டிய சம்பந்தன் ஐயாவோ இயக்கமற்ற நிலையில் இருந்து மரணித்தும்போனார் அவர் கையில் இருந்த பந்து இப்போது பலர் கைகளுக்கு மாறப்போகிறது. குறிப்பாக சொல்லப்போனால் மூன்று தரப்புக்களிடம் அது சிக்கப்போகிறது அந்த முத்தரப்பும் ஒருங்கிணைந்து இவ்விடயத்தை கையாளப்போகிறதா அல்லது தனித்தனியே அடிபட்டு மண்ணாகப்போகிறதா என்பதிலேயே தங்கியிருக்கிறது. தமிழரசின் எதிர்காலம். மூன்று தரப்பில் ஒரு தரப்பு சுமந்திரன் அணி மற்றயது சிறீதரன் அணி அடுத்தது சம்பந்தன் அணி. இப்போது ஆட்டத்தில் இருந்து சம்பந்தன் அணி தானாகவே விலகவேண்டிய சூழல் வந்துவிட்டது. 

சுமந்திரன் அணியை சேர்ந்த சண்முகம் குகதாசன் அடுத்த திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறப்போகிறார் வெற்றிடமான சம்பந்தன் ஐயாவின் இடத்திற்கு அவருக்கு அடுத்தபடியாக அதிகூடிய விருப்பு வாக்கு பெற்ற குகதாசன் ஐயா நியமனம் பெறுவது சட்டப்பிரகாரமானது. அதிலே மாற்றங்கள் செய்யமுடியாது. சாதாரண மாவட்ட கிளை தலைவராக இருந்த குகதாசன் இப்போது திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினர் ஆகப்போகின்றார். 

 இதுவரையில் அவரை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வரக்கூடாது என்று பேசியவர்கள் இனி வாய்மூடி மெளனியாகவேண்டிவரும் தமிழரசு கட்சியின் மாநாடு குழம்பியதற்கு பிரதான காரணமே இந்த பொதுச்செயலாளர் பிரச்சினைதான். எழுதப்படாத ஒப்பந்தமாய் பாரம்பரியமாக வடக்கிற்கும் கிழக்கும் சம அளவில் பகிரப்பட்ட தலைவர் பொதுச்செயலாளர் பதவிகள் இரு பகுதியையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பகிரப்படுவது கட்சிக்கும் பலமே. 

ஆக சிறீதரன் கட்சிக்கு தலைவராகவும் குகதாசன் பொதுச்செயலாளராகவும் ஏலவே பொதுச்சபையில் தெரிவுசெய்யப்பட்டவகையில் தொடரவேண்டுமெனில் வழக்காளிகள் வழக்கினை கைவாங்கவேண்டும்.  அதை செய்யவைக்கவேண்டியது சுமந்திரன் தரப்பில் உள்ளது. சம்பந்தன் எனும் அரசியல் ஆளுமையினால் கைப்பிடித்து அரசியலுக்கு கூட்டிவரப்பட்ட சுமந்திரன் கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை ஏற்பது அல்லது அவருக்கு அப்பொறுப்பை வழங்குவது தமிழரசு கட்சிக்குள் ஓர் முத்தரப்பு சமநிலையை தோற்றுவித்து ஒருங்கிணைந்த பாதையில் கட்சியை கொண்டுசெல்ல வழியேற்படும். அதற்கான வழிகளை திறந்துவிட்டே ஐயா கண்மூடியுள்ளார். 

செத்தும் கொடுப்பான் சீதக்காதி என்பதுபோல ஐயா செத்தும் கொடுத்துள்ளார். அதை சரிவர பயன்படுத்தினால் கட்சி சாகாது இல்லாவிட்டால் ஐயாவோடு சேர்த்து கட்சியையும் சிதையில் ஏற்றிவிடவேண்டிவரும்... ஐயாவின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி

சு.பிரபா

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!