மியான்மரில் திங்யான் பண்டிகையில் வெடிகுண்டு தாக்குதல் - நால்வர் பலி

#Death #Festival #Attack #water #BombBlast #Myanmar
Prasu
1 month ago
மியான்மரில் திங்யான் பண்டிகையில்  வெடிகுண்டு தாக்குதல் - நால்வர் பலி

மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 

இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது. இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார். இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். 

இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். 

எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.