மின்கட்டணம் குறைக்கப்பட்டு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்! காஞ்சன

தவறான அரசியல் தீர்மானத்தை எடுத்து நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதா? அல்லது தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். மின்கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும்.
திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடு எவ்வாறான நிலையில் இருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள். எரிபொருளுக்கான நீண்ட வரிசை,18 மணி நேர மின்விநியோக துண்டிப்பு,எரிவாயு பற்றாக்குறை என அனைத்து பிரச்சினைகளும் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீது பொறுப்பாக்கப்பட்டது. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது, வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டது பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து மக்கள் போராட்டம் தோற்றம் பெற்றது.அதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினார்.
அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.அதனை தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.முறையான மறுசீரமைப்புக்களின் பின்னர் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
2022 ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை பிரதான உதாரணமாக சர்வதேச மட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டது.ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்துள்ளது.
பொருளாதார பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் சிறந்த மறுசீரமைப்புக்களுடன் முன்னேற்றமடைந்த நாடுகளில் இலங்கை சிறந்த உதாரணமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் பற்றி பேசப்படுகிறது.தவறான கொள்கையுடனான அரசியல் தீர்மானத்தை மீண்டும் எடுத்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளுவதா? அல்லது தற்போதைய பொருளாதார ஸ்திரப்படுத்தலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதா? என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
மின்சார கட்டணம் அதிகளவில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.மின்னுற்பத்தியின் செலவை முகாமைத்துவம் செய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டதால் தான் மின்விநியோகம் இன்று சீராக முன்னெடுக்கப்படுகிறது.2023 ஆகஸ்ட் மாதமளவில் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவும் ஆகவே அனல் மின்நிலையங்களுடனான மின்னுற்பத்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று துறைசார் தரப்பினர் குறிப்பிட்டனர்.
அதற்கமைவாகவே கடந்த ஒக்டோபர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதிஷ்டவசமாக கடந்த ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றன. நீர்மின்னுற்பத்தியின் வீதம் உயர்வடைந்தது.ஆகவே மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் கடந்த டிசெம்பர் மாதம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய மின்கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முடியும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது. டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தல்,நீர்மின்னுற்பத்தி அதிகரிப்பு ஆகிய சாதகமான காரணிகளினால் மின்கட்டணத்தை அதிகளவான வீதத்தில் குறைக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினார்கள்.
மின்சாரத்துறையின் முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு முழுமையாக வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மின்கட்டணத்தை இயலுமான அளவு குறைப்பதற்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. பலர் சாதகமான யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின்கட்டணத்தை முழுமையாக இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீட்டு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட மின்கட்டண திருத்த யோசனை இன்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படும்.
இலங்கை மின்சார சபை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும். தேசிய வளங்களை பாதுகாப்போம் என்று போர்கொடி உயர்த்துபவர்கள் தமது சுய இலாபத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். மின்சார சபை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளார்கள். ஆகவே உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.



