கஞ்சா பயிர்ச் செய்கை தொடர்பில் புதிய திருப்பம்!

கஞ்சா ஏற்றுமதிக்குக் கடந்த திங்கட்கிழமை (5) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக நான் குறிப்பிடவில்லை. கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்கு நல்லது. பயனற்ற விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பெயரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கு மத தலைவர்கள், சிவில் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது இவ்விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன 'ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா தொடர்பில் பேசப்படவுமில்லை,கஞ்சா ஏற்றுமதி தொடர்பில் எவ்வித பத்திரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டு கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக வெளியான செய்தியை நிராகரித்தார்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக நான் குறிப்பிடவில்லை. 2023.11.29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவே குறிப்பிட்டேன்.இந்த அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சமர்ப்பித்துள்ளார்.
கஞ்சா ஏற்றுமதி செய்தால் நாட்டுக்குப் பயன் கிடைக்கும், ஏற்றுமதி செய்யாவிட்டால் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. காலம் காலமாக வெறும் விமர்சனங்களையும், பழைய கதைகளையும் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் முன்னேற்றமடைய முடியாது என்றார்.



