சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலை மீட்க உதவும் இந்தியா!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
பல நாள் மீன்பிடி இழுவை படகு லோரென்சோ புதா-4 ஜனவரி 16 அன்று இலங்கையின் டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
மொகடிஷுவுக்கு தென்கிழக்கே 840 கடல் மைல் தொலைவில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் குறித்த கப்பலானது நேற்று சிறைப்பிடிக்கப்பட்டது.
அதில் இருந்த ஆறு மீனவர்கள் மற்றும் அவர்களது இழுவை படகுகள் குறித்து ஐநாவின் மத்திய கடல்சார் கட்டளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
மீனவர்களை மீட்க இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொள்ள கடற்கொள்ளையர்கள் அனுமதித்துள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



