கண்டியில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் எயிட்ஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம்!
கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இலவச இரத்த பரிசோதனை திட்டத்தின் போது இரத்த தானம் செய்தவர்களில் எயிட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கண்டி எஸ்.டி.டி மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கண்டி மாநகர சுகாதார திணைக்களம் இணைந்து கடந்த முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்த இரத்த பரிசோதனை திட்டத்தை ஆரம்பித்திருந்தது.
இங்கு 386 பேர் இரத்தப் பரிசோதனைக்கு வந்துள்ளதாகவும் எயிட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நபரைத் தவிர சிபிலிஸ் எனும் சமூக நோயினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி எஸ்.டி.டி மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் டொக்டர் எம்.ஐ.எம். லரீஃப் தெரிவித்துள்ளார்.
அதன்படி எய்ட்ஸ் மற்றும் சமூக நோயால் பாதிக்கப்பட்ட இருவரையும் உடனடியாக பிரிவுக்கு அழைத்து வந்து சிகிச்சை தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குறித்த இருவரும் சுமார் 55 வயதுடையவர்கள் எனவும் டாக்டர் லரீஃப் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலுறவில் ஈடுபடுபவர்கள் எய்ட்ஸ் வைரஸ் தாக்கியது தெரியாமல் சமூகத்தில் நடமாடுவது மிகவும் ஆபத்தானது என்றும், பாதுகாப்பின்றி உடலுறவு கொண்டால் ரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.