அதிக சொத்து சேர்த்த வழக்கு: விமல் வீரவன்ச முன்வைத்த எதிர்ப்பை நிராகரித்த நீதிமன்றம்!
அமைச்சராக பதவி வகித்தபோது, 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துகள் மற்றும் பணத்தை சம்பாதித்த விதத்தை வெளியிட தவறினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்க முடியாது என அவரது சட்டத்தரணி முன்வைத்த அடிப்படை எதிர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
இதனடிப்படையில் இந்த வழக்கு முழுமையாக விசாரிக்க எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு இலஞ்ச சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ளதால் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் இதனால், குற்றப்பத்திரிகை தள்ளுபடி செய்து, தனது தரப்பு வாதியை விடுதலை செய்யுமாறும் கோரி வீரவங்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ அடிப்படை எதிர்ப்பை தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து தனது முடிவை அறிவித்த நீதிபதி, எதிர்ப்பு வாதங்களை நிராகரிப்பதாகவும் வழக்கை விசாரணைக்கு எடுக்கும் திகதியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி மற்றும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தில் அமைச்சராக பதவி வகித்த வீரவங்ச, 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை சம்பாதித்த விதத்தை வெளியிட தவறியாக குற்றம் சுமத்தி, இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.