சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை , கொழும்பு தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 40 மற்றும் 43 வயதுடையவர்களாவர். இவர்கள் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வர்கள் விமான நிலைய சோதனைகளை தவிர்த்துவிட்டு பொருட்களை பயணப்பையிற்குள் வைக்காமல் விமான நிலைய பொதி சுமை வண்டியில் ஏற்றி விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்படும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் 17 மடிக்கணினிகள், 47 கையடக்கத் தொலைபேசிகள் , 1 லீற்றர் நிறையுடைய 22 விஸ்கி மதுபான போத்தல்கள் , 3 ஒலி உபகரணங்கள் , 200 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள், 3 மைக்ரோ போன்கள், 8 கமராக்கள் , 55 கையடக்கத் தொலைபேசி பாகங்கள் மற்றும் 39 கையடக்கத் தொலைபேசி பெட்டரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.