தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடி : பெண் ஒருவர் கைது!
தென்கொரியாவில் வெல்டிங் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே அறுபதாயிரத்து ஐநூறு ரூபாயை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை இன்று (09.12) நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்று (08.12) திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கந்தானை - நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய பெண்ணுக்கு எதிராக 15 முறைப்பாடுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் 05 இலட்சம் ரூபா தொடக்கம் 15 இலட்சம் ரூபா வரையான தொகையை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பின்னர் பணியகத்திற்கு அழைத்து அவரை கைது செய்தனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, தென் கொரியாவின் வெல்டிங் துறையில் வேலைகளை வழங்குவதற்கு ஒரு சில வேலைவாய்ப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.