இரண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டாலும் ராஜபக்ஷர்களுக்காக மட்டுமே எனது கைகள் அசையும் - ரோஹித பெருமிதம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, தான் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டில் உறுதியாக செயற்படுபவதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னை இரண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்யும் சூழ்நிலை வந்தாலும், வெட்டப்பட்ட இரு பகுதிகளில் ஓரளவு உயிர் இருந்தாலும் அவை ராஜபக்ஷக்களுக்காகவே கையசைக்கும் எனவும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானமே இறுதி தீர்மானமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
“தனிப்பட்ட கருத்துகளை முன்வைப்பதற்கு சகலருக்கும் உரிமை இருக்கிறது. யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பது தொடர்பான பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு கட்சி ரீதியான நிலைப்பாடாகவே இருக்கும்.

எமது கட்சியின் முன்னோடியான மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது ஏனைய சிரேஷ்ட தலைவர்களோ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை.
ஆனால், அடுத்த வேட்பாளர் பொதுஜன பெரமுனவின் சார்பில் முன்னிலைப்படுத்தப்படுவார். ஒவ்வொருவரும் வெவ்வேறு பெயர்களை குறிப்பிடுவார்களாக இருந்தால் அது கட்சியின் நிலைப்பாடாக இருக்காது.
அது அவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்க முடியும். இதுவரையில் இந்த நாட்டுக்காக மஹிந்த ராஜபக்ஷ செய்த விடயங்களை எந்தவொரு தலைவரும் செய்ததும் இல்லை. செய்யவும் முடியாது.
அரசியல்வாதிகளுக்கு இதனை சவாலாக குறிப்பிடுகிறேன். அரசியல் ஞானத்தை எவருக்காவது பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதனை மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.
நாங்களும் அவ்வாறே கற்றுக்கொண்டோம். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. பொறுமை, அர்ப்பணிப்பு என சகல குணமும் அவரிடம் இருக்கிறது. அதனால், என்றும் அவர் தவறான ஒருவரை தெரிவு செய்யமாட்டார்.
சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து தனியான ஒரு கட்சியை உருவாக்கி, இரு தேர்தல்களில் வெற்றிகொள்ள முடியுமென்றால் இம்முறையும் அதனை செய்ய முடியும்.
கோட்டாபய ராஜபக்ஷ வாய்ப்பை தவறாக பயன்படுத்தி கொண்டமை வேறு விடயம். ஆனால், கோட்டாபய தேர்தலில் வெற்றியடைந்தார்.
மஹிந்த ராஜபவும், பொதுஜன பெரமுனவுமே அவரை வெற்றியடையச் செய்தோம். நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக்கொண்டுள்ளோம்.
இதற்கான பரிந்துரைகள் கூட மஹிந்தவினாலேயே பெற்றுக்கொடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.