சாவைக் கடந்து சரித்திரம் படைக்க நினைத்த சந்திரிகா!

#SriLanka #Chandrika Kumaratunga #history #srilankan politics
Mayoorikka
2 years ago
சாவைக் கடந்து சரித்திரம் படைக்க நினைத்த சந்திரிகா!

சமாதானப் புறாவாக பார்க்கப்பட்ட சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரசியலில் தந்திரம், மந்திரம், நெளிவு, சுழிவு, சூழ்ச்சி, சதி என அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்தவர் என அவரின் ஆதரவாளர்கள் இன்றளவிலும் போற்றி புகழ்கின்றனர்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டுகால தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தமை, ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றி, இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதி என சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் சாதனை பட்டியல் நீள்கிறது.

 பல தடைகள் படையெடுத்து வந்தபோதிலும் – சோக மேகங்கள் தன் வாழ்க்கையை முழுமையாக சூழ்ந்தவேளையிலும் தன்நம்பிக்கையை கைவிடாது தளராத துணிவோடு போராடி எதிர்நீச்சல் போட்டு கரைசேர்ந்த பெண்மணி இவர் என பெண் சமூகசெயற்பாட்டாளர்கள் புகழ்மாலை சூட்டுகின்றனர்.

 பிறப்பு – கல்வி 1945 ஆம் ஆண்டு ஜுன் 29 ஆம் திகதி பிறந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்வியை இலங்கையில் கற்றார்.

 14 வயதில் தந்தையை பறிகொடுத்தார். சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான பண்டாரநாயக்க 1959 இல் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1960 இல் அவரின் பாரியாரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். கட்சி தலைமையும் அவரிடம் கையளிக்கப்பட்டது. எனினும், 1965 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய தேசியக்கட்சி அரியணையேறியது.

images/content-image/2023/12/1701755877.jpg

 உயர்கல்விக்காக சந்திரிக்கா வெளிநாடு பறந்தார். பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் பட்டம்பெற்ற அவர், ஏனைய சில துறைகளிலும் தேர்ச்சி பெற்ற பின்னர் 1972 இல் தாயகம் திரும்பினார்.

 நாடு திரும்பியகையோடு சுதந்திரக்கட்சி ஊடாக அரசியல் பயணத்துக்கு ஆரம்ப புள்ளிவைத்தார். 1970 மார்ச் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்திருந்ததால் முக்கியமான சில அரசாங்க திணைக்களங்களிலும், ஆணைக்குழுக்களிலும் அவர் உயர் பதவியை வகித்தார். 1978 இல் நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகுமாரணதுங்கவை சந்திரிக்கா கரம்பிடித்தார். எனினும், 10 ஆண்டுகளே இல்லற வாழ்வு நீடித்தது. 

1988 இல் விஜயகுமாரணதுங்க சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். முதல்வர் சந்திரிக்கா……. இதனால் சந்திரிக்காவின் வாழ்வில் பெரும் தளம்பல் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சுதந்திரக்கட்சியை கைவிட்டுவிட்டு, தனது கணவரால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மக்கள் கட்சிக்கு புத்துயிர்கொடுக்க முற்பட்டார். 

இப்படி பல மாற்றங்களுக்கு மத்தியில் மீண்டும் வெளிநாடு சென்றார். இலங்கை திரும்பியதும் மீண்டும் தாய்வீடு(கட்சி) சென்றார். மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் முதலமைச்சரானார்.

 அதன்பின்னர் 1994 இல் நடைபெற்ற பொதுதேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 464,588 வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் தெரிவானார். மக்கள் கூட்டணி ஆட்சியில் பிரதமராக பதவியேற்றார். 1977 – 1994 ஐக்கிய தேசியக்கட்சியின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டது.

 அதே ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டணி சார்பில் சந்திரிக்கா களமிறங்கினார். எனினும். ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. பெரும் இழுபறிக்கு மத்தியில் இறுதியில் காமினி திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டது. புதுமுக வேட்பாளர் சந்திரிக்காவை தோற்கடித்து காமினி திஸாநாயக்க அரியணையேறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.


 ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் கொழும்பு, தொட்டலங்க பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது படுகொலை செய்யப்பட்டார் காமினி திஸாநாயக்க. இதனால் கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அச்சமும், பீதியும் மக்களை ஆட்கொண்டன. டி.பி. விஜேதுங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட தலைவர்களை கூடினர். அனுதாப வாக்குமூலம் வென்றுவிடலாம் என்ற நினைப்பில் காமினி திஸாநாயக்கவின் பாரியாரான வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டார்.

 ஜனாதிபதி சந்திரிக்கா…… எனினும், சந்திரிக்கா பண்டாரநாயக்கு குமாரதுங்க – 4,709,205 (62.28%) வாக்குகளைப்பெற்று அரியணையேறினார். கட்சி தலைமைப்பதவி, நிறைவேற்று அதிகாரம் என சந்திரிக்காவின் அரசியல் காட்டில் அடை மழையே பொழிந்தது. பின்னர் 1999 இல் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  

images/content-image/2023/1701755908.jpg

அரசியலமைப்பின் பிரகாரம் 6 ஆண்டுகள் பதவி வகிக்கமுடியும் என்றபோதிலும் முன்கூட்டியே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதற்கு சந்திரிக்கா தயாரானார். இதன்படி இலங்கையின் 4 ஆவது ஜனாதிபதி தேர்தல் 1999 டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மக்கள் கூட்டணியின் இறுதி பிரசாரம் கூட்டம் ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிக்கா தலைமையில் டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு நகர மண்டப பகுதியில் நடைபெற்றது.

 அன்றிரவு நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் (புலிகளால்) சந்திரிக்கா அம்மையார் படுகாயமடைந்தார். பலர் கொல்லப்பட்டனர். இதனால். சந்திரிக்கா பக்கம் அனுதாப அலை திருப்பியது. ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்குவங்கியுள்ள மாவட்டங்களில்கூட ரணில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. எனினும், ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 

2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். எனினும், நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கத்துக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி முக்கிய அமைச்சுகள்மீது சந்திரிக்கா கை வைத்தார். 

இதனால், பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. இதனால் நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சந்திரிக்கா உருவாக்கினார். ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிகவிழ்ந்தது. 

இத்தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தது. மஹிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டார். மஹிந்தவுக்கு அடித்த அதிஷ்டம் சந்திரிக்காவின் தேர்வாக மஹிந்த இருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன உட்பட மேலும் சில உறுப்பினர்களே அவரின் மனதில் இருந்தனர். இறுதியில் அதிஷ்டமும், அழுத்தமும் கைகொடுக்க மஹிந்த ராஜபக்ச பிரதமரானார்.

 இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இலங்கையின் 5 ஆவது ஜனாதிபதி தேர்தல் 2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் மஹிந்தவுக்கு சார்பாக சந்திரிக்கா பிரசாரம் செய்யவில்லை, காலைவாரும் முயற்சியில் இறங்கினார் என அண்மையில்கூட பஸில் ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்ற பின்னர், சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியும் சந்திரிக்காவிடமிருந்து பறிபோனது. அதன்பின்னர் திட்டமிட்ட அடிப்படையில் சந்திரிக்கா அம்மையார் ஓரங்கட்டப்பட்டார்.

 பண்டாரநாயக்கவின் நாமத்தை இல்லாதுசெய்யும் சூழ்ச்சியை ராஜபக்சக்கள் மிகவும் சூட்சுமமான முன்னெடுத்தனர். இது அப்படி நடைபெற்றது என்பதை ஜனாதிபதி மைத்திரியும், சந்திரிக்காவும் 2014 இல் வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006 இற்கு பிறகு செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கிய சந்திரிக்கா, 2010 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோற்கடிக்க முயற்சித்தார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், அவ்வாண்டு வெளிப்படையாக களத்தில் இறங்கி அவர் எவ்வித பிரசாரத்தையும் முன்னெடுக்கவில்லை.

 எனினும் 2014 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியேற்றி, பொதுவேட்பாளராக களமிறக்கிய அரசியல் ஒப்பரேஷனில் சந்திரிக்கா முக்கிய வகிபாகத்தை வகித்தார். புலனாய்வு பிரிவுகளுக்கே தெரியாமல் அரங்கேறிய இந்த அரசியல் காய்நகர்த்தலின் பின்னர், 2014 நவம்பர் 21 ஆம் திகதி கொழும்பில் மைத்திரியுடன் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி, சினிமாப் பாணியில் அரசியலுக்கு ரீ என்டர் கொடுத்தார் சந்திரிக்கா. தேர்தலில் மைத்திரி வெற்றிபெற்றார். நல்லாட்சி மலர்ந்தது. சந்திரிக்காவின் கட்டளையின் பிரகாரமே ஆரம்பத்தில் மைத்திரி செயற்பட்டார்.

 நிறைவேற்று சபையிலும் உறுப்பினராக சந்திரிக்கா இடம்பிடித்தார். இருவரும் இணைந்து சுதந்திரக்கட்சியையும் கைப்பற்றினர். அதிரடி மறுசீரமைப்புகள் இடம்பெற்றன. இதனால் சந்திரிக்காவின் நாமம் மீண்டும் அரசியல் களத்திலும், ஊடகங்களிலும் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. ஆனாலும் சந்திரிக்காவின் ஆதிக்கம் நீடிக்கவில்லை. 

மைத்திரியும் தனிவழியில் செயற்பட ஆரம்பித்தார். மறுபடியும் விரக்தி நிலைக்கு சென்றார் சந்திரிக்கா. 2018 உள்ளாட்சி சபை தேர்தலுக்கு பின்னர் நிலைமை முழுமையாக மாறியது. சுதந்திரக்கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமல்ல 34 ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் அக்கட்சி நழுவியுள்ளது. இதற்கு மைத்திரியின் தலைமைத்துவம்மீதே சரமாரியாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் சரணடைந்துள்ள சுதந்திரக்கட்சியை மீட்டெடுப்பதற்காக, சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பு என்ற இயக்கமொன்று உருவாகியுள்ளது. எதிர்வரும் 5 ஆம் திகதி அமைப்பின் சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது.

 குமார வெல்கமவும் இந்த அணியில் இருக்கிறார். இதற்கு சந்திரிக்கா அம்மையார் தலைமை வகிப்பார் எனக் கூறப்பட்டாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், வெளிநாடு சென்றிருந்த சந்திரிக்கா அம்மையார் தற்போது நாடு திரும்பியுள்ளார்.

 அதேவேளை, புலிகள்கூட ஆரம்பத்தில் சந்திரிக்காவை சமாதானப் புறாவாகவே பார்த்தனர். காலபோக்கில் முறுகல் ஏற்பட்டது. இறுதியில் சந்திரிக்காமீது 99 இல் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

 நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்படும் என்ற உறுதிமொழியை சந்திரிக்காவே முதலாவதாக வழங்கினார். புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கும் முயற்சித்தார். அது கைகூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!