வடக்கில் உள்ள பல மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு
வடக்கில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரமான கரையோரப் பகுதியை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் உள்ளூர் மீனவர்கள் கொந்தளிப்பில் இருப்பதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எஸ். குதாஸ் தெரிவித்தார்.
யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். “கடற்கரையை உள்ளடக்கியதாக சுமார் 10 கிலோமீற்றர் நீளமுள்ள நிலப்பரப்பை வன பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அராலி மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய கரையோரப் பகுதிகள், வட்டு தெற்கு கரையோரப் பகுதி, பொன்னாலை மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகள் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வியலும் இந்த கரையோரத்தில்தான் தங்கியுள்ளது. ஆனால், வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள பிரதேசத்தில் மக்களின் பொது இடங்களும் உள்ளடங்குகின்றன.
இந்த பிரதேசத்தில் முற்றுமுழுதாக கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை முடக்கும் வகையில் இந்த முன்மொழிவு அமைந்துள்ளது. சாதாரண மக்களின் ஒப்புதல் இல்லாமல் இதைச் செய்ய முடியாது.
இது வர்த்தமானி அறிவித்தலோ, கையகப்படுத்தும் அறிவித்தலோ அல்ல இதுவொரு முன்மொழிவு மாத்திரமே. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் காணியை கேட்பதால் வழங்க முடியாது. பொது மக்களின் ஒப்புதலுடன் மாத்திரமே இது சாத்தியமாகும்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் பலவந்தமாக சுவீகரித்ததாக கடந்த காலங்களில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமே உள்ளன” என தெரிவித்தார்.