உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு எதிராக மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி

#India #Warning #WorldCup #Public #Terrorists #ICC #Khalisthan #Final
Prasu
8 months ago
உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு எதிராக மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதி

ICC உலகக்கோப்பை இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ள சூழலில், காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுன், அதற்கு எதிராக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ICC உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்தப் போட்டியை மைதானத்திலும், நேரலையிலும் காண ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இறுதிப்போட்டியை இழுத்து மூடுவேன் என்று குர்பத்வந்த் சிங் பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தடை செய்யப்பட்ட ’சீக்கியர்களுக்கான நீதி’ என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பை சேர்ந்தவராக தன்னை குர்பத்வந்த் சிங் பன்னுன் முன்னிறுத்திக்கொள்கிறார். 

கடந்த மாதத்தில் ஒரு முறை இந்தியாவில் நடைபெறும் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அதே போன்று ஏர் இந்தியா விமானத்துக்கும் ஒரு முறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தால், ஜூலை 2020ல் பன்னுன் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டது. ’இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி வருவதாகவும், பஞ்சாபில் உள்ள சீக்கிய இளைஞர்களை தீவிரவாதத்தில் சேர ஊக்குவித்து வருவதாகவும்’ பன்னூன் மீது தீவிரமான குற்றச்சாட்டு உண்டு. இவற்றுக்கு அப்பால் அவரது மிரட்டல்கள் பொருட்படுத்தப்பட்டதில்லை.

எனினும், பன்னூன் மிரட்டல் விடுத்ததை அடுத்து போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

பன்னூன் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், சீக்கியர்களுக்கு எதிரான 1984 கலவரம் மற்றும் 2002 குஜராத் கலவரம் ஆகியவை குறித்து பேசுபவர், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஏற்கனவே இது போன்ற மிரட்டல் ஒன்றில், ‘நடைபெறப் போவது உலக கோப்பை போட்டியாக இருக்காது உலக பயங்கரவாதக் கோப்பையின் தொடக்கமாக இருக்கும்’ என்றெல்லாம் எச்சரித்து இருந்தார்.