நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை முறையாக அபிவிருத்தி செய்ய முடிவு

நவீன உலகிற்கு ஏற்றவாறு பாடசாலைகளை முறையாக அபிவிருத்தி செய்யும் பிரதான திட்டத்திற்கு மேல் மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டது.
பாடசாலைகளை உத்தியோகபூர்வமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்கு முன்னர் மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் அனுமதி பெறப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள மேல்மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
பாடசாலையின் ஆபத்தான கட்டிடங்களை அகற்றி பாடசாலையின் தேவைக்கேற்ப கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் இந்த அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கம்பஹா கல்வி கோட்டத்தில் 24 பாடசாலைகளையும் மினுவாங்கொடை கல்வி கோட்டத்தில் 34 பாடசாலைகளையும் இலக்கு வைத்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.



