வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராட்டங்கள்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை போராட்டம் மற்றும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
மன்னார் சதொச மனிதப் புதைகுழி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடிப் பாலம் பகுதியில் போராட்டம் இடம்பெற்றதுடன் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.