சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பது பற்றி ‘பிரிக்ஸ்’ நாட்டு தலைவர்களுடன் மோடி ஆலோசனை

#world_news #D K Modi #Lanka4 #Indian
Kanimoli
2 years ago
சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பது பற்றி ‘பிரிக்ஸ்’ நாட்டு தலைவர்களுடன் மோடி ஆலோசனை

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய 'பிரிக்ஸ்' மாநாடு நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி நிகழ்வாக மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்கா சென்றார். அவரை அந்நாட்டு துணை அதிபர் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ரூ.410 லட்சம் கோடி பொருளாதாரம் பின்னர், 'பிரிக்ஸ்' வர்த்தக கூட்டமைப்பு தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். 

அதில் அவர் பேசியதாவது:- இந்தியாவில் செய்யப்பட்ட மாபெரும் சீர்திருத்தங்கள், அங்கு வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. எனவே, இங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் இணைய வேண்டும்.இந்தியா விரைவில் ரூ.410 லட்சம் கோடி பொருளாதாரமாக மாறும். உலகத்தின் வளர்ச்சி என்ஜினாக உருமாறும். 'பிரிக்ஸ்' நாடுகள் அனைத்தும் விரைவில் இந்தியாவின் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்த வாய்ப்புள்ளது. அத்துடன், பிரிக்ஸ் நாடுகள் சேர்ந்து, உலக நலனுக்கு, குறிப்பாக, தெற்குலக நாடுகளின் நலனுக்கு பாடுபட முடியும். இவ்வாறு அவர் பேசினார். 

அதிபருடன் சந்திப்பு பின்னர், தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசாவை பிரதமர் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், பரஸ்பர நலன்சார்ந்த பிரச்சினைகள் ஆகியவை குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஜி-20 அமைப்பின் தலைமையை ஏற்றதற்கு இந்தியாவுக்கு சிறில் ரமாபோசா வாழ்த்து தெரிவித்தார். அம்மாநாட்டுக்கு வர ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். இன்னொரு நாளில், அரசுமுறை பயணமாக தென்ஆப்பிரிக்கா வர வேண்டும் என்ற ரமாபோசாவின் அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இச்சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:- தென்ஆப்பிரிக்க அதிபருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இந்திய-தென்ஆப்பிரிக்க உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தோம். வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பு பற்றியும் பேசினோம். தெற்குலக நாடுகளின் குரலை வலுப்படுத்த நாங்கள் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சர்வதேச சவால்கள் அதைத்தொடர்ந்து, 'பிரிக்ஸ்' நாட்டு தலைவர்களிடையே முக்கிய சந்திப்பு நடந்தது. அதில், சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். 

ரஷிய அதிபர் புதின், நேரடியாக பங்கேற்கவில்லை. மூடிய நிலையில் நடந்த இந்த கூட்டத்தில், மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளை பற்றி தலைவர்கள் விவாதித்தனர். சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண 'பிரிக்ஸ்' அமைப்பை தயார்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசினர். புதிய நாடுகள் சேர்ப்பு 'பிரிக்ஸ்' அமைப்பில் சேருவதற்கு 23 நாடுகள் விண்ணப்பித்துள்ளன. எனவே, புதிய நாடுகளை சேர்த்து, 'பிரிக்ஸ்' அமைப்பை விரிவாக்கம் செய்வது, மாநாட்டின் முக்கிய நோக்கம் ஆகும். அந்தவகையில், தலைவர்கள் சந்திப்பின்போது, எந்தெந்த நாடுகளை சேர்ப்பது என்பது தொடர்பாக கருத்தொற்றுமை உருவாக்குவதில் இந்தியா முன்னணியில் நின்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாநாட்டில் உரை இதற்கிடையே, 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசினார். அவர் பேசியதாவது:- 'பிரிக்ஸ்' அமைப்பை விரிவாக்கம் செய்வதை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது. கருத்தொற்றுமை அடிப்படையில், புதிய நாடுகளை சேர்ப்பதை வரவேற்கிறது. 'பிரிக்ஸ்' அமைப்பு, எதிர்காலத்துக்கு தயார்நிலையில் இருக்க வேண்டும். ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினர் ஆக்கும் இந்தியாவின் யோசனைக்கு 'பிரிக்ஸ்' நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும்.

 இந்த மாநாட்டில் தெற்குலக நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை வரவேற்கிறோம். அதுபோல், ஜி-20 அமைப்பில் தெற்குலக நாடுகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். ரஷிய அதிபர் புதின் காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர், அடுத்த 'பிரிக்ஸ்' மாநாடு, அடுத்த ஆண்டு ரஷியாவின் கசன் நகரில் நடத்தப்படும் என்று கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!