வறட்சியால் அழிவடைந்த நெற்செய்கைகளின் எண்ணிக்கை 46 ஆயிரம் ஏக்கரை தாண்டியுள்ளது!
வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்செய்கைகளின் எண்ணிக்கை 46,000 ஏக்கரைதாண்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையின் சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையின்படி, நேற்றைய நிலவரப்படி சேதமடைந்த நெற்பயிர்களின் அளவு 46,904.54 ஏக்கர் ஆகும். 41,402 விவசாயிகள் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள குருநாகல் மாவட்டத்தில் 23,286 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன் 27,904 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது அதிக பயிர் இழப்பு உடவலவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் 14,667 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து 5,867 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியான காலநிலையால் நெல் சாகுபடி மட்டுமின்றி மற்ற பயிர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மித்தெனிய, ஒகந்தயா, புகந்தயா ஆகிய பகுதிகளில் 25 தொடக்கம் 30 வருடங்கள் பழமையான மிளகுத்தோட்டங்கள் தண்ணீர் இன்றி நாசமடைந்துள்ளன.
தற்போது குருநாகல் மாவட்டத்தின் எஹெதுவெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹீரலுகம கிராமத்தில் உள்ள ஏரி முற்றாக வறண்டு போயுள்ளதுடன், அதன் மூலம் பயிர் செய்யப்பட்ட நெற்செய்கைகள் முற்றாக அழிவடைந்துள்ளன.