தேசிய கீத விவகாரம்: குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவுள்ள உமாரா சிங்கவன்ச
ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதம் பாடியமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய அவர் விரைவில் அழைக்கப்பட உள்ளார்.
விருப்பத்திற்கு மாறாக தேசிய கீதத்தை மாற்றி பாடுவது நாட்டை சீரழிக்கும் செயலாகும் என புதிய மக்கள் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் காயத்ரி சொய்சா தெரிவித்துள்ளார்.
மேலும், உலகில் எந்த ஒரு நாடும் இவ்வாறு நடந்து கொள்வதில்லை என்றும், இது குறித்து ரகசிய பொலிசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
லஞ்சம், ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பு இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.