இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள ஐஸ் பாவனை : பாடசாலைகள் குறித்தும் விசேட கவனம்!
இலங்கையில், ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சக்கிய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஏனைய மருந்துகளுடன் ஒப்பிடும் போது, அதன் பரவல் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்நாட்டின் பாடசாலை அமைப்பில் புகையிலை பாவனையின் போக்கு காணப்படுகின்றது எனவும் தற்போது அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபை இலங்கை முழுவதும் ஐஸ் பாவனை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கணக்கெடுப்பின்படி இலங்கையில் தற்போது சராசரியாக 50,000 பேர் ஐஸ் பாவனையில் ஈடுபடுவதாகவும், பாடசாலை அளவில் ஐஸ் உபயோகம் இருக்கிறதா என்று ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பாடசாலை அளவில் இது தாக்கம் செலுத்தவில்லை எனத் தெரிவித்த அவர், இலங்கையில் 15 இலட்சம் பேர் சிகரெட் அல்லது புகையிலையை பயன்படுத்துகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.