கொழும்பில் ஆதரவற்ற சிங்கள குடும்பத்திற்கு தியாகி ஐயா நிதியுதவி
கொழும்பு வத்தளை பிரதேசத்தில் பஸ் சாரதியால் ஏற்படுத்தப்பட்ட விபத்தினால் ஆதரவற்று போயுள்ள சிங்கள குடும்பம் தொடர்பிலான தகவல் வத்தளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்த தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் ஐயாவினால் அக்குடும்பத்தினருக்கு உடனடி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது கடந்த மே மாதம் 10 ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் பஸ் சாரதி ஒருவரின் கவனயீனம் காரணமாக ஸ்ரீயானியும் அவரது கணவரும் பயணித்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கினார்.
இந்த விபத்தில் ஸ்ரீயானியின் கால்கள் பலத்த சேதமடைந்ததுடன், முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு பகுதியும் சேதமடைந்தது. ஆனால் நிறை மாத கர்ப்பிணியான ஸ்ரீயானியின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை கண்டறிந்த வைத்தியர்கள், அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க முடிவு செய்தனர்.
ஸ்ரீயானி 2 மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருந்ததால், அவரது கணவர் குழந்தையை கவனித்து வந்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்த 27 வயதான ஸ்ரீயானிக்கு தற்போது கணவர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய சாரதி பற்றிய எந்த தகவலும் இதுவரை தெரியாத நிலையில், சட்டத்தின் மூலம் தங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்திக, மனைவி மற்றும் குழந்தையை கவனிக்க ஆள் இல்லாததால் வேலையை இழந்துள்ளார்.கவனயீனமற்ற சாரதி ஒருவரால் ஸ்ரீயானி, இந்திக ஆகியோரின் வாழ்வு இருண்டு போயுள்ள நிலையில் இவர்களுக்கான நேச கரத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் நீட்டி உள்ளார்.
ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்கள் மூலம் அக் குடும்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்து கொண்ட அவர் அக்குடும்பத்தை உடனடியாக பார்வையிட்டு அவர்களுக்கான முதல் கட்ட உதவியாக ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியினை வழங்குமாறு தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதற்கு அமைவாக இவ்உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நீர் கொழும்பு சிரேஷ்ட பொலீஸ் அத்தியச்சகர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவித்தொகையினை நீர் கொழும்பு சிரேஷ்ட பொலீஸ் அத்தியச்சகர் சமன் சேகர மற்றும் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களினால் இவத்துக்குள்ளானவரின் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன,மத, மொழி வேறுபாடுகளற்ற மனிதாபிமான உதவிகளை முன் நின்று மேற்கொண்டு வரும் கொடை வள்ளல் வாமதேவன் தியாகேந்திரன் ஐயாவின் தன்நலமற்ற சேவையினை நாட்டின் முக்கிய அரசியல் பிரமுகர்கள்,அரசு அதிகாரிகள் என அனைத்து இன மக்களும் பெரிதும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

