நெருக்கடி காலத்தில் அதிகார பகிர்வு குறித்து பேசக்கூடாது - சரத் பொன்சேகா!
நாடு நெருக்கடியில் இருக்கும்போது அதிகாரப்பகிர்வு குறித்து கலந்துரையாடப்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்றையதினம் (28.07) இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அதிகாரப்பகிர்வு குறித்து பேசும் போது சிந்தித்து நிதானமாக பேச வேண்டும் எனவும், நாட்டில் நெருக்கடி நிலை காணப்படும்போது இது குறித்து பேசுவது உகந்தது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு இல்லை எனில் இனவாதிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே எனது நிலைப்பாடாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.