13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் உரிமை நாட்டு மக்களிடமே உள்ளது!
13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இல்லை எனவும், அந்த அதிகாரம் நாட்டு மக்களுக்கே உள்ளது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு கருத்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நேற்று (28.7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தற்போது உள்ள தேசிய நல்லிணக்கம் இல்லாமல் போகும் எனவும், பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் ஆகியவற்றை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளிப்பது முரண்பாட்டை தோற்றுவிக்கும் எனக் கூறிய கம்மன்பில, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு மாத்திரமே இருப்பதாகவும் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அதை தவிர்த்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.