டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் ராணி புகையிரதத்தின் உன்னத சேவையின் ஓராண்டு நிறைவு நாள்
யாழ் ராணி புகையிரதத்தின் உன்னத சேவையின் ஓராண்டு நிறைவு நாள் மாலை கொண்டாடப்பட்டது. யாழ் ராணி புகையிரத சேவையானது கடந்த வருடம் இதே நாளில் தனது சேவையினை யாழ். காங்கேசன்துறையிலிருந்து கிளிநொச்சி வரை ஆரம்பிக்கப்பட்டு, பின்பு வவுனியா வரையில் தனது சேவையினை விஸ்தரித்திருந்தது.
இந்நிலையில், யாழ்ராணி புகையிரத பயணிகளின் ஏற்பாட்டில், குறித்த புகையிரத சேவையின் ஒரு வருட பூர்த்தி நாளினை நினைவுகூரும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் சிறப்புற இடம்பெற்றது.
யாழ்ராணி புகையிரத பயணி அ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டதனை தொடர்ந்து நிறைவு நாள் மகிழ்வினை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி மகிழ்ந்ததனை தொடர்ந்து யாழ் ராணியின் சேவையினை பாராட்டி கருத்துரைகளும் இடம்பெற்றன.
மேலும் ஓராண்டு நிறைவு நாளின் ஞாபகார்த்தமாக கிளிநொச்சி புகையிரத நிலைய வளாகத்தில் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ராணி புகையிரத பயணிகள், அரச உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், யாழ்ராணி புகையிரத சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்ராணி புகையிரத சேவையினூடாக பல்வேறுபட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அறிவியல் நகர்ப்புற கற்கை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நன்மையடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


